ஐ. ஏ. காதிர் கான்
அதிகரித்து வரும் உலகளாவிய தட்டம்மை அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் வகையில், 2023 ஏப்ரல் 7 ஆம் திகதிக்கும், ஜூலை 5 ஆம் திகதிக்கும் இடையில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களை இலக்காகக் கொண்டு இலங்கை சுகாதார மேம்பாட்டுப் பணியகம், முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, குருநாகல், கண்டி, கல்முனை மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாகக் காணப்படுவதால், இந்த அவசர நிலை குறிப்பாக வலியுறுத்தப்படுவதாக, பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்பிரகாரம், எதிர்வரும் 2024 ஜனவரி 6 ஆம் திகதிக்குள் 6 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரையிலான குழந்தைகள், கூடுதல் தட்டம்மை தடுப்பூசி இடத் தகுதியுடையவர்கள் என, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நடவடிக்கை, அடையாளம் காணப்பட்ட ஆபத்தில் உள்ள பகுதிகளில், அதிக தொற்று நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.
தட்டம்மை தடுப்பூசி இடும் நடவடிக்கைகளை, ஜனவரி 6 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அருகிலுள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று, பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்து கொள்ளுமாறும், இலங்கை சுகாதார மேம்பாட்டுப் பணியகம், அனைத்து பெற்றோர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.