Mani Singh S
சென்னை: சென்னை கோயம்பேடு அலுவலகத்தில் இருந்து பூந்தமல்லி சாலை வழியாக விஜயகாந்த் உடல் தீவுத்திடல் கொண்டு செல்லப்படுகிறது. விஜயகாந்த் உடலுக்கு வழி நெடுக தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று காலை காலமானார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் உயிரிழந்த செய்தி அறிந்ததும் தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் கதறினர். சென்னை மியாட் மருத்துவமனையில் இருந்து கோயம்பேடு அலுவலகத்திற்கு விஜயகாந்த் உடல் எடுத்து செல்லப்பட்டது.
கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடலை நல்லடக்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக விஜயகாந்த் உடல் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ள கோயம்பேடு அலுவலகத்தில் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்தனர்.
நேரம் செல்ல செல்ல கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. இதனால், அஞ்சலி செலுத்த வந்த திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கூட நெரிசலில் சிக்கும் நிலை இருந்தது. கடுமையான கூட்ட நெரிசலுக்கு மத்தியில் தான் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர். விஜயகாந்த் உடலுக்கு இன்றும் அஞ்சலி செலுத்த வெளியூர்களில் இருந்து தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் குவிந்து வருவதால் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இதனால், கோயம்பேடு பகுதி நெரிசல் மிக்கது என்பதால் விஜயகாந்த் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடல் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, இன்று காலை 4.50 மணிக்கு விஜயகாந்தின் உடல் கட்சி அலுவலகத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி பயணத்தை தொடங்கியது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் விஜயகாந்த் உடலுடன் பிரேமலதா, சுதீஷின் மனைவி ஆகியோர் செல்கிறார்கள்.
தீவுத்திடல் நோக்கி விஜயகாந்தின் உடல் பயணம்! கேப்டன் கேப்டன் என மக்கள் கண்ணீர்
தொண்டர்கள் கேப்டன் கேப்டன் என கதறி அழுதனர். வழி நெடுக தொண்டர்கள் குவிந்து இருப்பதால் மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்படுகிறது. தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதன் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்படும் வாகனம் மிக மெதுவாக ஊர்ந்தபடி தான் சென்றது.