பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
நுவரெலியாவிற்கு வார இறுதியில் சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய விடுமுறை நாட்களிலும் வெளிமாவட்டங்களிலிருந்தும் , வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
குறிப்பாக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையிலும் , நத்தார் பண்டிகை விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை என தொடர்கிறது.
இதனால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நுவரெலியாவுக்கு விடுமுறையினை கழிப்பதற்காக செல்கின்றனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக நுவரெலியா விக்டோரியா பூங்காவிலும் கிரகரி பூங்காவிலும் கிரகரி வாவி கரையிலும் , உலக முடிவு, சீதை அம்மன் கோவில் , வரலாற்று சிறப்புமிக்க தபால் நிலையம் போன்ற பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டங் கூட்டமாக குவிந்துள்ளன.
அத்தோடு நுவரெலியா கிரகரி வாவி கரையில் அமைக்கப்பட்டுள்ள காணிவேல் களியாட்ட நிகழ்வுகளிலும் , மட்டக்குதிரை சவாரி செய்யும் இடத்திலும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் குவிந்து காணப்படுகின்றனர்.
இவ்வாறு சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் நுவரெலியாவிற்கு வருகை தருவதால் வாகன தரிப்பிடங்களிலும் பிராதான வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
இந்த நாட்களில் நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதற்கு காலநிலை பொருத்தமானதாக உள்ளமையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் சுற்றுலா இடங்களை பார்த்து பொழுதுபோக்கி வருகின்றனர்.