கொழும்பு
கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படும் இன்று (25) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லாவிட்டால் 011 247 27 57 என்ற விசேட இலக்கத்தின் ஊடாக பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு விசேட அரச மன்னிப்பின் கீழ் 1,004 சிறைக்கைதிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும் முன்னதாக அறிவிக்கப்பட்டபடி சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்து பயணத் திட்டங்கள் இன்று இயக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட தூர சேவைகளுக்காக சுமார் 100 மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதுடன், இன்றும் தேவைக்கு ஏற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ண ஹன்சா தெரிவித்தார்.