பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
பங்களாதேஷ் 1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தரேக் எம்.டி அரிஃபுல் இஸ்லாம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இதனை உத்தியோகபூர்வ கையளித்தார்.
இருபத்தி நான்கு அத்தியாவசிய மருந்துகளை உள்ளடக்கிய இந்த நன்கொடையானது, இலங்கை அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்ட தேவைகளுக்கு இணங்க, பங்களாதேஷின் அரசுக்கு சொந்தமான மருந்து நிறுவனமான Essential Drugs Company Limited (EDCL) இனால் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரிகள், சுகாதார செயலாளர் வைத்தியர் பி.ஜி. மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, (இராஜதந்திர விவகாரங்கள்) பணிப்பாளர் வைத்தியர் டி.டி.ஜி எம்.எஸ்.டி தர்மரத்ன, வைத்தியர் அன்வர் ஹம்தானி மற்றும் பணிப்பாளர் MSD வைத்தியர் டயஸ்.ஆகியோர் கலந்துகொண்டனர்.
நன்றி தெரிவித்த சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, பங்களாதேஷ் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அவர்களின் நட்புறவான செயலுக்கு நன்றி தெரிவித்தார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில், குறிப்பாக முக்கியமான சுகாதாரம் மற்றும் மருந்துத் துறைகளில் பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பங்கிற்காகவும் அவர் பாராட்டினார்.உயர் ஸ்தானிகர் அரிஃபுல் இஸ்லாம், இந்த நன்கொடை இலங்கை மீதான பங்களாதேஷின் அர்ப்பணிப்பு மற்றும் நல்லெண்ணத்திற்கு ஒரு சான்றாகும் என விவரித்தார்.
மருந்து மற்றும் சுகாதாரத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான குறிப்பிடத்தக்க சாத்தியக்கூறுகளை அவர் எடுத்துரைத்தார்.
மே 2022 இல், பங்களாதேஷ் ஒரு நல்லெண்ணச் செயலாக 2.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான மருத்துவப் பொருட்களையும் வழங்கியது.
பங்களாதேஷில் இருந்து மருந்துப் பொருட்களைப் பெறுவதில் மிகவும் வலுவான ஒத்துழைப்புக்கான வழிகளை இரு அரசாங்கங்களும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.