கடந்த ஒக்டோபர் மாதம் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் வரலாற்றில் முக்கிய நிகழ்வொன்று இடம்பெற்றது. 2003ல் சாதாரண தரம் 2006ல் உயர்தரம் கற்ற மாணவர்கள் ஒன்று சேர்ந்து தரம் ஒன்று முதல் 13வரை தாம் கல்வி கற்ற காலத்தில் கடமையாற்றிய அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைவரையும் அழைத்து பாராட்டு விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.
வைத்தியர்கள், கணக்காளர்கள், முகாமையாளர்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள் என பல்வேறுபட்ட துறைகளில் இம்மாணவர்கள் இப்போது பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். நான் உயர்தர கலைப்பிரிவு வகுப்பாசிரியராகவும் புவியியல் பாட ஆசிரியராகவும் இரு வருடங்கள் இந்த மாணவர்களுடன் ஒன்றாக இருந்திருக்கிறேன். எனது சேவைக் காலத்தில் நானோ பாடசாலையோ இந்த மாணவர்களால் எவ்வித சங்கடங்களுக்கும் முகங்கொடுக்க வில்லை என்பதில் மட்டில்லா மகிழ்ச்சியடைகிறேன். பதவி பட்டங்களுக்கு அப்பால் மனித நேயமிக்கவர்களாக, அன்றும் இன்றும் பாடசாலைக்கு உதவுபவர்களாக இம்மாணவர்கள் திகழ்கின்றனர் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.
சாதாரண தரம் வரை இணைந்திருந்து உயர்தரத்தில் வெவ்வேறு துறைகளில் பிரிந்துச் சென்ற இவர்கள் இருபது வருடங்களின் பின்னர் நாட்டின் நாலா பக்கங்களில் இருந்தும் வந்து அன்றைய வைபவத்திற்கு மெருகூட்டினர். இந்த விழாவில் கல்வி மட்டம் தகுதி என்ற எவ்வித வித்தியாசங்களுமின்றி அவர்கள் செயற்பட்ட விதம் நாம் இவர்களிடம் கண்ணுற்ற விசேட பண்பாகும்.
விருந்துபசாரம் நினைவுச்சின்னம் என்பவற்றுக்கும் மேலதிகமாக நோய், முதுமை அதனுடன் இணைந்த தனிமை என்பவற்றால் சோர்ந்திருந்தவர்களை நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஓரிடத்தில் சந்திக்கச் செய்து சுகதுக்கங்களை பரிமாறிக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கியதும் விலை மதிப்பற்ற செயலாகும். விழாவுக்கு அழைக்கப்பட்ட அனைவரினதும் ஒருமித்த கருத்தும் இதுவே. விழாவுக்கு வந்திருந்த கல்வி சாரா ஊழியர்களும் இறையடி சேர்ந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கண்ணீர் மல்க நன்றி பாராட்டியமையும் குறிப்பிடத்தக்கதாகும். காலஞ்சென்ற எனது தாயார் நூர்பவ்ஸியா இந்த மாணவர்களின் தரம் ஒன்று வகுப்பாசிரியராவார். எனது தாய் மாமா சிற்றுண்டிச்சாலை நடத்தியவர். இருவரையும் ஞாபகப்படுத்தி பிரார்த்தனை செய்தமைக்கும் எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இரு வருட காலங்கள் புவியியலுக்கு மேலதிகமாக வாழ்வியலையும் கற்றுக் கொடுத்தமைக்கு பிரதிபலன் கிடைக்கப் பெற்றதாக அந்த வைபவத்தின்போது உணர்ந்தேன்.
ஆசிரியர்களுக்கும் சமூகத்திற்கும் இடையே பெரிய இடைவெளி காணப்படுகின்ற இக்காலத்தில் இவ்வாறான ஒரு முன்மாதிரியான நிகழ்வொன்றை நடத்திய இம்மாணவர்களின் பணிகளை இறைவன் பொருந்திக் கொள்வானாக. தமக்கு கல்வி புகட்டிய ஆசான்களை மறவாமல் நன்றி பாராட்டிய இம்மாணவர்களின் உயர்தர ஆசிரியை என்ற வகையில் அவர்களுக்கான நன்றியினையும் பாராட்டினையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
திருமதி M. F. R.பர்வின்
ஆசிரியர்
அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி.
திஹாரிய.