பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
மியன்மாரில் தாய்லாந்து எல்லை அருகே பயங்கரவாத குழுவொன்றின் சைபர் அடிமைகளாக பலவந்தமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இலங்கை இளைஞர்கள் ஐவர் தப்பியுள்ளனர்.
மியன்மார் – தாய்லாந்து எல்லையில் உள்ள குறித்த பகுதி கூகுள் வரைபடத்தில் ‘Cyber criminal Area’ எனப்படும் சைபர் குற்றப் பிரதேசமாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மியன்மாரின் மியாவெட்டி நகரில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள குறித்த பிரதேசம் முழுமையாக பயங்கரவாத குழுவொன்றின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தாய்லாந்தில் கணினி துறையில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதாகக்கூறி அழைத்துச் செல்லப்பட்ட 50-க்கும் மேற்பட்ட இலங்கையின் இளைஞர், யுவதிகள் தொடர்ந்தும் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் இலங்கையின் இளைஞர், யுவதிகளை சுற்றுலா விசா மூலம் தாய்லாந்திற்கு அழைத்துச் சென்ற இலங்கையர்கள் இருவர், தலா 5000 டொலருக்கு அவர்களை பயங்கரவாதிகளிடம் விற்பனை செய்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்த இளைஞர் ஒருவர் தமது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
பல்பொருள் அங்காடி ஒன்றில் தரவுப் பதிவேற்ற தொழில் வழங்குவதாகக் கூறியே தம்மை தாய்லாந்திற்கு அழைத்துச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், சமூக ஊடகங்களில் பெண்களைப் போன்று நடித்து, சில கணக்குகளை பெண்களது கணக்குகள் போல் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என பணிக்கப்பட்டதாகக் கூறினார்.
இது ஒரு நாடகமாக அரங்கேறுகின்றது. மிகப்பெரிய மோசடி. 18 மணித்தியாலங்கள் வேலை செய்யும் போது 9 மணித்தியாலத்திற்குள் நாம் ஒரு பாவனையாளரை, செல்வந்தர் ஒருவரை படிக்கத் தவறினால் எமக்கு உணவு குடிநீர் வழங்க மாட்டார்கள். முழந்தாளிடச் செய்து என்னைத் தாக்கினர்.
என துன்புறுத்தலுக்குள்ளான இளைஞர் தெரிவித்தார்.
துன்புறுத்தலுக்கு இலக்கான நான்கு இளைஞர்களும் யுவதி ஒருவரும் கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் திகதி பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்தனர்.
கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி தாய்லாந்து ஊடாக பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்ட தாம் ஆறு மாதங்களாக சைபர் அடிமைகளாக சேவையில் அமர்த்தப்பட்டதாக கூறினர்.
இந்த ஐந்து இலங்கையர்களும் லாவோஸில் மற்றுமொரு பயங்கரவாத குழுவிடம் கையளிப்பதற்காக தாய்லாந்து ஊடாக அழைத்துச் செல்லப்பட்டபோதே தப்பியுள்ளனர்.
இந்த ஆட்கடத்தல் தொடர்பில் குடிவரவு குடியல்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதரகம் தெரிவித்தது.
பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள 56 இலங்கையர்களை மீட்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தூதரகம் குறிப்பிட்டது.
மியன்மாரில் இராணுவ ஆட்சி நிலவுவதால் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருக்கும் இலங்கையர்களை மீட்பதில் சிரமம் உள்ளதாகவும் மியன்மாருக்கான இலங்கை தூதரகம் தெரிவித்தது.