அனுதாபச் செய்தியில் முஸ்லிம் மீடியா போரம்
மருதமுனை-01 அக்பர் வீதியைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் பி.எம்.எம்.ஏ.காதர் அண்மைக்காலமாக சுகயீனமுற்றிருந்த காரணத்தினால் (18) நேற்று திங்கட்கிழமை தனது 66 ஆவது வயதில் காலமானார்.
அவரது மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சார்பில் அதன் தலைவர் என்.எம்.அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில்,
பல இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகவும் ஊக்குவிப்பாளராகவும் இருந்துள்ள பி.எம்.எம்.ஏ. காதருடைய இழப்பு ஊடகத்துறையில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட உறுப்பினரான மர்ஹும் பி.எம்.எம்.ஏ. காதருக்கு அவரது ஊடக ஆளுமையைப் பாராட்டி கௌரவிக்கும் முகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அதன் வருடாந்த மாநாடு ஒன்றில் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கிக் கௌரவித்தது.
இவர் 35 வருடகாலமாக தனது ஊடகப்பயணத்தை நிறைவு செய்த நிலையில் இறையடி சேர்ந்துள்ளார். இவர், தினகரன், வீரகேசரி, விடிவெள்ளி, தமிழன், தினக்குரல், மெட்ரோ நியூஸ், நவமணி, போன்ற பத்திரிகைகளிலும் வாராந்த சஞ்சிகை மித்திரனிலும் மற்றும் மாதாந்த சஞ்சிகைகளிலும் தனது எழுத்துப்பணியைத் தொடர்ந்தார்.
அன்னார் எம்.எம்.ஹவ்லதின் அன்புக் கணவரும், ஹரீஸா, சாயிறா. றாயிஷா, சீமா, சீபா, சஜீத் அஹமட் ஆகியோரின் தந்தையுமாவார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அவருடைய மறைவையிட்டு தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கும் அதேவேளை, அவருடைய மறுமை வாழ்வுக்காக அனைவரையும் பிரார்த்திக்குமாறும் சகலரையும் கேட்டுக் கொள்கின்றது.