இஸ்மதுல் றஹுமான்
தென் கொரியா நாட்டில் வேலை செய்துவந்தவர் கத்தியால் குத்திக்கொலை. பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி டாக்டர் சிறி ஜயந்த விக்ரமரத்ன முன்னிலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்றது.
பமுனுகம, நுகபே, கெரத்தவளயை சேர்ந்த 29 வயது ஒரு பிள்ளையின் தந்தையான துலாஜ சதுரங்க றொட்ரிகோ என்பவரே கொல்லப்பட்டவராவர்.
இவர் தொழிலுக்காக முகவர் நிலையம் ஊடாக ஒரு குழுவினருடன் கடந்த ஆகஸ்ட் 19ம் திகதி இலங்கையிலிருந்து தென் கொரியா நாட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் சாரதியாக தொழில் புரிந்துள்ளார்.
மரணமானவரின் மனைவி போவத்தேகெதர நிவாசனா செவ்வந்தி மரண விசாரணையின் போது சாட்சியம் அளிக்கையில்
மரணமான எனது கணவர் வேலைசெய்யும் கம்பெனியின் காமராவிலயே தங்கியிருந்தார். பக்கத்துக் காமராவில் அதே கம்பனியில் வேலைசெய்யும் அருன மனோஜ் என்பர் தங்கி இருப்பதாகவும், அவர் குடிபோதையில் அன்றாடம் எனது கணவருக்கு ஏசுவதாகவும் எனக்கு சொல்லியிருந்தார்.
எனது கணவர் இறுதியாக கடந்த 2 ம் திகதி என்னுடன் கதைத்தார். அவருடன் வேலை செய்யும் ஒருவர் கடந்த 3ம் திகதி என்னுடன் தொடர்பு கொண்டு கணவர் நித்திரையில் இருக்கும் போது மனோஜ் என்பவர் அவருக்கு கத்தியால் குத்தியுள்ளதாகவும் கூக்குரல் இடும் சப்தத்தைக் கேட்டு நாம் அங்கு சென்றபோது மனோஜ் என்பவர் கையில் கத்தியுடன் காமராவிலிருந்து வெளியே செல்வதைக் கண்டதாகவும் கூறினார். அவரை அங்கே கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் சாட்சி என்பவற்றைக் கருத்திற்கொண்டு திடீர் மரண விசாரணை அதிகாரி டாக்டர் விக்ரமரத்ன கூரிய ஆயுதத்தால் நெஞ்சில் குத்தியதில் அதிக இரத்தம் பொருக்கெடுத்தனால் ஏற்பட்ட தவறான மனிதப் படுகொலை என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க, விமானநிலையம் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி சேனாநந்த (102277) சாட்சியை நெறிப்படுத்தினார்.