இஸ்மதுல் றஹுமான்
24 வீடுகளை உடைத்து சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய மூவரை நீர்கொழும்பு பிராந்திய குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். களவாடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டன.
கட்டுநாயக்க, சீதுவ, நீர்கொழும்பு, ஜா எல, ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து திருடியுள்ளதுடன் மள்வானை மற்றும் சீதுவ பிரதேசத்தில் களவாடப்பட்ட பொருட்களை விற்பனை செய்திருந்த நிலையில் பொலிஸார் அவற்றை மீட்டுள்ளனர். கேஸ் விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து கேஸ் சிண்டர் தொகையை களவாடி விற்பனை செய்த நிலையில் சிலிண்டர்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதில் மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி, கேஸ் சிலிண்டர்கள், புள் வெட்டும் இயந்திரம் மற்றும் வீட்டுப் பாவணைப்பொருட்கள் அடங்குகின்றன.
சீதுவ, ராஜபக் புரயைச் சேர்ந்தவர்களான ஸுபாஷன மதுஷான் அதிகாரி(28 வயது), கெலும் பியன்த குமார் (42வயது), திவுலபிட்டியைச் சேர்ந்த நந்தசிரி சேபல குமாரசிங்க(47வயது) ஆகியோர்களே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நீர்கொழும்பு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அநுருத்த பண்டாரநாயக்க, பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேரா ஆகியோரின் ஆலோசனைக்கிணங்க நீர்கொழும்பு பிராந்திய குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் விக்ரமசிங்க தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் சுதத் குணவர்தன, பொலிஸ் சார்ஜன் விஜயநாயக்க(5775), பொலிஸ் கான்ஸ்டபல்களான கயான்(135377), ஜயரத்ன(104932), மதுசங்க(89904), ஜயகொடி(85409) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினரே சந்தேக நபர்களை கைது செய்து களவாடிய பொருட்களை பொலிஸ் பாதுகாப்பில் எடுத்தனர்.
சந்தேக நபர்களுக்கு சுமார் 10 நீதிமன்ற பீடிஆணை உள்ளதாகவும் பொலிஸாருக்கு தலைமறைவாகி இருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும்
பொலிஸார் தெரிவித்தனர். பகற்காலங்களில் நடமாடி வேவு பார்த்து கொள்கைகளை திட்டமிட்டு இரவு நேரத்தில் ஸ்குறூ டைவர், கொரடு என்பவற்றை எடுத்துச் சென்று கதவுகளை உடைத்து இக்கொள்ளைகளை செய்ததாக அவர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.
சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.