ஐ. ஏ. காதிர் கான்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக வைக்க கட்சி தீர்மானித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் (16) சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
“பசில் ராஜபக்ஷ ஒரு நிறுவனராக இருந்து, கட்சி அமைப்புப் பணிகளைச் செய்கிறார். அதனால், தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக விடுவது என, அவரும் கட்சியினரும் ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.
எதிர்காலத்தில் நாம் எடுக்கும் அரசியல் தீர்மானங்களின் அடிப்படையில், அதற்குத் தேவையான ஒருவரை நியமிப்போம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மீண்டும் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டதுடன், புதிய பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டார்.
அத்துடன், மேலும் இரண்டு பிரதி தேசிய அமைப்பாளர் பதவிகள் உருவாக்கப்படவுள்ளதாகவும், கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, புதிதாக உருவாக்கப்படவுள்ள இரண்டு பிரதி தேசிய அமைப்பாளர் பதவிகளையும், முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஒரு முஸ்லிம் ஒரு தமிழர் என்ற அடிப்படையில் இரண்டு உறுப்பினர்களுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.