பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் முதல் கட்டம் பற்றிய விரிவான மீளாய்வை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
முதற்கட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்தும் கவனத்தில் கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் பதினான்கு இலட்சத்து ஆறாயிரத்து தொள்ளாயிரத்து முப்பது பயனாளிகளுக்கான பணம் தற்போது வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பயனாளிகளின் எண்ணிக்கையை 20 இலட்சமாக உயர்த்தி பொருத்தமானவர்களை தெரிவு செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்காக 2024 ஆம் ஆண்டிற்கு 205 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.