இஸ்மதுல் றஹுமான்
வீட்டில் பொய் சொல்லி விட்டு குளிக்கச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவரின் சடலங்கள் கொச்சிக்கடை, பம்புகுழிய பிரதேசத்தில் மணல் அகழும் குழியிலிருந்து மீட்கப்பட்டன.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் வெளிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது கவிந்து மற்றும் விஹங்க எனும் இரு பாடசாலை நண்பர்களாவர்.
நீர்கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி டாக்டர் சிறி ஜயந்த விக்ரமரத்ன முன்னிலையில் இடம் பெற்ற மரண விசாரணையில் மரணமடைந்த கவிந்துவின் தாய் இஸானி கான்ஞனா சாட்சியம் அளிக்கையில் மரணமடைந்தவர் எனது மூத்த மகன் இவர் வெளிஹேன சிங்கள கலவன் பாடசாலையில் பத்தாம் தரத்தில் கல்வி கற்கிறார்.
6ம் திகதி காலையில் பாடசாலை சென்று பிற்பகல் 2 மணியளவில் வீடு வந்தார்.
சாப்பிட்ட பின்னர் மகனின் நண்பன் விஹங்க வந்து பாடசாலை மைதானத்தில் விளையாடுவதற்காக 2.45 மணியளவில் அழைத்துச் சென்றார். மாலை 6.30 மணியாகியும் மகன் வீடுவரவில்லை. அவரது நண்பனின் வீட்டிற்கு பேசிய போது அவரின் தந்தை கூறினார் அவர்கள் இன்னும் வீடுவரவில்லை என்றார்.
இரவு 7.30 மணியளவில் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன்.
இவர்கள் இதற்கு முன்பும் ஹல்பே ஏரியில் குளிக்கச் செல்வதாக சில பாடசாலை மாணவர்கள் கூறினார்கள்.
பம்புக்குழி பிரதேசத்தில் ஏரியின் அருகில் மகனினது அவரது நண்பரினதும் உடைகள் இருந்ததுடன் அவர்கள் சென்ற துவிச்சக்கர வண்டியும் காணப்பட்டது.
பின்னர் பொலிஸார் வந்து பிரதேசவாசிகளின் உதவியுடன் கவிதுவின் சடலத்தை தேடிஎடுத்தனர். சில மணி நேரங்களின் பின்னர் விஹங்கவின் சடலத்தையும் கண்டெடுத்தனர்.
நீர்கொழும்பு மாவட்ட வைத்திய சாலையில் பிரேத பரிசோதனை நடாத்தி அறிக்கை சமர்பிக்குமாறு திடீர் மரண விசாரணை அதிகாரி கொச்சிக்கடை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
கொச்சிக்கடை பொலிஸ் நிலைய சாஜன்ட் நிசான்த(64617) விசாரணையை நெறிப் படுத்தினார்.