ருஸைக் பாரூக்
கொழும்பு — அநாதரவான சிறுவர்களை பராமரித்து ஆதரவளிக்கும் வகையில் இயங்கும் சுயாதீன காப்பகமான OrphanCare க்கு, கொழும்பின் புகழ்பெற்ற பேக்கரி தயாரிப்புகள் விற்பனை உணவகமான Paan Paan உதவிக்கரம் நீட்டியுள்ளது. இலங்கையின் அநாதரவான இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இந்த கைகோர்ப்பை மேற்கொண்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த மனிதநேயச் செயற்பாடாக அமைந்துள்ள இந்த பங்காண்மையானது, அநாதரவான சிறுவர்கள் தமது காப்பகங்களிலிருந்து வெளியேறி இளமைப்பருவத்தை எய்தும் போது நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
Paan Paan இல் விற்பனையாகும் புகழ்பெற்ற ஒவ்வொரு கடை பாணிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட தொகை OrphanCare க்கு அன்பளிப்புச் செய்யப்படும். இந்த ஆதரவானது, அநாதரவான சிறுவர்களுக்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் என்பதுடன், கல்வி, திறன் விருத்தி மற்றும் ஒளிமயமான எதிர்காலத்தை அணுகுவதற்கு உதவும். OrphanCare மற்றும் Paan Paan ஆகியவற்றுக்கிடையிலான இந்த பங்காண்மை என்பது, வரவேற்கத்தக்க செயற்பாடாக மாத்திரம் அமைந்திராமல், மூலோபாய ரீதியில் முக்கியமானதாகவும் அமைந்துள்ளது. தமது பாண் விற்பனைகளிலிருந்து ஒரு பகுதி பணத்தை ஒதுக்கீடு செய்வதனூடாக, அநாதரவான இளைஞர்களுக்கு வலுவூட்டும் காப்பகத்தின் முயற்சிகளுக்கான தமது அர்ப்பணிப்பை Paan Paan வெளிப்படுத்தியுள்ளது.
Paan Paan இன் பணிப்பாளர் அபூ யூசுப் கருத்துத் தெரிவிக்கையில், “சுவையான பாண் வகைகளை தயாரிப்பது மாத்திரமன்றி சமூகத்துக்கு வளமூட்டுவது என்பது Paan Paan இன் பிரதான கருப்பொருளாக அமைந்துள்ளது. OrphanCare உடன் கைகோர்த்துள்ளதனூடாக, எமது பிரதான பெறுமதிகளுடன் இணைந்த செயற்பாட்டுக்கும், சமூக ஈடுபாட்டுக்கும் பங்களிப்பு வழங்க முடிந்துள்ளதையிட்டு பெருமை கொள்கின்றோம். கடை பாணை கொள்வனவு செய்யும் சகல வாடிக்கையாளர்களாலும் இந்த இளம் அநாதரவான சிறுவர்களின் வாழ்வின் மறுமலர்ச்சிக்காக பங்களிப்பு செய்யக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
OrphanCare இன் தலைமை அதிகாரி அசாத் சஹீத் இந்தப் பங்காண்மை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “OrphanCare இல் எமது நோக்கம், அநாதரவான சிறுவர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் வாழ்க்கையில் கைவிடப்படாமல், அவர்களை வழிநடத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது என்பதாக அமைந்துள்ளது. நேர்த்தியான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான எமது அர்ப்பணிப்பை பகிர்ந்து கொண்டுள்ள Paan Paan நிறுவனம் இந்த காப்பகத்துக்கு பங்களிப்பு வழங்க முன்வந்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். ஒன்றிணைந்து இந்த சிறுவர்களின் வாழ்க்கையில் நேர்த்தியான மாற்றத்தை ஏற்படுத்தவும், உறுதியான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் முயற்சிப்போம்.” என்றார்.
அமானா வங்கியை ஸ்தாபக அனுசரணையாளராகக் கொண்டுள்ள OrphanCare, அநாதரவான சிறுவர்களை அரவணைத்து வழிநடத்தும் சூழலை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கையில் இரண்டாவது தடவையாகவும் அநாதரவாக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் செயலாற்றுகின்றது. இந்த காப்பகத்தின் சகல நிர்வாக மற்றும் செயற்பாட்டு செலவுகளையும் அமானா வங்கி முழுமையாக பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த காப்பகத்துக்காக நன்கொடை வழங்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் சம்பந்தப்பட்ட அனுகூலம் பெறுவோரை சென்றடைவதை அமானா வங்கி உறுதி செய்கின்றமை விசேட அம்சமாகும்.
OrphanCare பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், பங்காண்மையை ஏற்படுத்திக் கொள்வதற்கு காணப்படும் வாய்ப்புகள் பற்றி அறிந்து கொள்ளவும் www.orphancare.org எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும் அல்லது 011 775 6 775 ஊடாக தொடர்பு கொள்ளவும்.
சமூக சேவையில் அதிகளவு ஈடுபாடு கொண்ட காப்பாளர்கள் குழுவினால் OrphanCare நிதியம் நிர்வகிக்கப்படுகின்றது. இதன் நிர்வாகிகளாக ருஸ்லி ஹுசைன் (இலங்கை ரொட்ராக்ட் அமைப்பின் ஸ்தாபகர்), காப்பகத்தின் செயலாளர் செல்வி. பி. சிரீன் வொட்சன், பொருளாளர் ஜஸ்ரி மக்தொன் இஸ்மாயில் (முன்னாள் தலைவர் AAT), தேசபந்து திலக் டி சொய்ஸா (ஹெல்பேஜ் ஸ்ரீ லங்கா தவிசாளர்), ஹர்ஷ அமரசேகர (ஜனாதிபதி சட்டத்தரணி), கே.ஆர். ரவீந்திரன் (தவிசாளர், அமெரிக்க ரொட்டரி மையத்தின் காப்பாளர் குழு மற்றும் ரொட்டரி இன்டர்நஷனல் முன்னாள் தலைவர்), ஷரத் அமலீன் (இணை ஸ்தாபகர் MAS ஹோல்டிங்ஸ்), ஒஸ்மான் காசிம் (அமானா வங்கி ஸ்தாபகர்), தைய்யிப் அக்பரலி (சிரேஷ்ட பணிப்பாளர் அக்பர் பிரதர்ஸ்) மற்றும் மொஹமட் அஸ்மீர் (அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும்) ஆகியோர் காணப்படுகின்றனர். உயர் வெளிப்படைத்தன்மையை பேணுவதற்காக உறுதியான ஆளுகை கட்டமைப்பை காப்பாளர்கள் நிறுவியுள்ளதுடன், அதனூடாக நிதியத்தின் நீண்ட கால நிலைபேறாண்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.