ஐ. ஏ. காதிர் கான்
நாட்டில் உள்ளூர் முட்டைகளின் விலை குறைந்துள்ளதாக, முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்பிரகாரம், மக்கள் ஒரு முட்டையை 40 ரூபா முதல் 43 ரூபா வரையில் கொள்வனவு செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
“65 ரூபா முதல் 70 ரூபா வரை அதிகரித்திருந்த முட்டையின் விலை வீழ்ச்சிக்கு, உள்ளூர் முட்டை உற்பத்தி அதிகரித்தமையே காரணம்” என, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்படி, பண்ணையில் இருந்து ஒரு வெள்ளை முட்டை 37 ரூபாவுக்கும், சிவப்பு முட்டை 38 ரூபாவுக்கும் விற்பனைச் செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார்.
முட்டை உற்பத்தியும் கணிசமான அளவு அதிகரித்து வருவதாகவும், மாதத்திற்கு ஐந்து இலட்சம் முட்டைகள் உற்பத்தியாகி வரும் நிலையில், இம்மாதம் 60 இலட்சம் அல்லது 65 இலட்சமாக உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் தலைவர் சரத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில், நாட்டு முட்டைகளை மக்கள் தேவையான அளவு கொள்வனவு செய்ய முடியும் எனவும், எதிர்காலத்தில் முட்டையின் விலை மேலும் குறைவடையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முட்டை உற்பத்தி அதிகரித்து வருவதாலும், நாட்டுக்குத் தேவையான முட்டை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாலும், இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது என்றும் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டிசம்பர் மாதத்துக்குப் பின்னரும் இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.