ஐ. ஏ. காதிர் கான்
அதிபர் சேவையில் அருஞ் சேவை புரிந்து வரலாறு படைத்த அறபாவின் முன்னாள் அதிபர் வாரிஸ் அலி மௌலானா அதிபர் அவர்களைப்
பாராட்டி கௌரவிக்கும் விழா மற்றும்
நூல் வெளியீடு என்பன, வெலிகமை அறபா தேசிய பாடசாலை முற்றவெளியில் (03) ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றன.
ஆசிரியராகவும் அதிபராகவும் 41 வருடங்கள் சிறப்பான சேவை புரிந்த பெரு மதிப்பிற்குரிய ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் வாரிஸ் அலி மௌலானா அவர்களிடம் கற்றோர், நாட்டின் நாளா புறங்களிலும் சிறந்த சேவையாற்றி வருகின்றனர்.
களுத்துறையில் இவர்கள் ஆற்றிய சேவை மகத்தானது. வார்த்தைகளால் மட்டிட முடியாதது. இதை, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் கல்வி வரலாற்றை மீட்டிப் பார்ப்பவர்கள் மறுக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.
இவர்கள், நடமாடும் பல்கலைக் கழகமாகத் திகழ்ந்த, “குத்புகள் திலகம்” அறிவு மேதை ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் யாஸீன் மௌலானா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பேரர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் அதிதிகள் குழு உள்ளிட்ட நலன் விரும்பும் குழு ஆகியன இணைந்து நடத்திய இவ்வழகான அதி சிறப்பு நிகழ்வில், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், உலமாக்கள், அதிதிகள், நலன்விரும்பிகள் எனப் பலரும் பெரும் ஆர்வத்தோடு பங்கேற்றிருந்தனர்.