சுஐப்.எம்.காசிம்
நீருக்குள் நெருப்பை கடத்தும் அரசியல் காய்நகர்த்தல்கள், நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. 2024 இல் நடைபெறவுள்ள பல தேர்தல்களைக் கருத்திற்கொண்டுதான் இக்காய்கள் நகர்த்தப்படுகின்றன. கிரிக்கெட் சபை விவகாரம், பொலிஸ் மா அதிபர் நியமனம் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் புதிய அமைச்சுக்கள் எல்லாம் அரசாங்கத்துக்குள் நிலவும் அபிப்பிராய பேதங்களுக்கான சாட்சிகள்.
விளைாட்டுத்துறையும் இளைஞர் விவகாரமும் ஹரின் பெர்னாண்டோவுக்கும் நீர்ப்பாசனம் பவித்ராவுக்கும் வழங்கப்பட்டதிலிருந்து ஓங்கும் கரங்களை உணர்ந்து கொள்ளலாம். நஸீர் அஹமடின் அமைச்சு பறிபோன சந்தர்ப்பத்திலும் இவ்வாறு ஒரு சலசலப்பு ஏற்பட்டது. பறிக்கப்படும் அமைச்சுக்கள் பகிரப்படும் விதங்களிலிருந்து ஓங்கும் கரங்களையும் ஒடிக்க முனையும் கரங்களையும் ஊகிக்க முடிகிறது.
இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்க நேரிட்டுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பிளவுகளை ஏற்படுத்தும், பிரித்தாளும் பிரயத்தனங்களாகவும் இவற்றை பார்க்கலாம். ரொஷான் ரணசிங்கவின் அமைச்சு பறிக்கப்பட்டமை குறித்து இதுவரைக்கும் ராஜபக்ஷக்கள் தரப்போ அல்லது அவர்களின் கட்சியோ எதையும் கூறவில்லை. இதனால், பின்வரிசை எம்.பிக்களுக்கு தலைமையில் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாம். தென்னிலங்கையின் அதிகப்பெரும் ஆணையை தாரைவார்த்து கொடுத்ததில் என்ன பலன்? ஒரே குடும்பத்தினர் பாதுகாக்கப்பட்டுள்ளனரே தவிர கட்சிக்கு ஒரு நன்மையும் ஏற்படவில்லை. இந்நிலை நீடித்தால் ‘ஊமையன் கண்ட கனவாகிவிடும்’ தமது நிலைமையென நாமல் மட்டுமே ஆதங்கப்படுகிறார். ஆனால், இவரது பெற்றோர்கள் அமைதியாக இருப்பதற்கு ஒரு அர்த்தம் இல்லாமலா போகும்? டிசம்பர் 15இல் நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாநாட்டுக்கு தலைமை தாங்கும் மஹிந்த அறிவிக்கவுள்ளதில்தான், அடுத்த களமும், கட்டமும் கட்டியங் கூறப்படும்.
பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டதிலிருந்து கட்டியங்கள் துலங்கத் தொடங்கிவிட்டன. இவரின் நியமனம் ராஜபக்ஷக்களுக்கு ஆறுதலானதாம். பொலிஸ் துறையில் செல்வாக்குச் செலுத்தி தமக்கு எதிரானவற்றை சமாளிப்பதற்கு தென்னகோனின் நியமனத்தை நம்பியுள்ளது இத்தரப்பு. அரகல ஆர்ப்பாட்டத்தில் இக்குடும்பத்தை பாதுகாக்க தென்னகோன் எடுத்த முயற்சிகள் இந்நாட்டில் ராஜபக்ஷக்களின் வாரிசுகளுக்கு வழிவிட்டுள்ளது.
மேல் மாகாணத்துக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரான தென்னகோன், கொவிட் தொற்று காலங்களில் ஆற்றிய பணிகள் நாட்டுக்கே நன்மையளித்தன. இதனால்தான், பாதாளக் கோஷ்டி, ஆட்கடத்தல்கள் மற்றும் போதை ஒழிப்புக்கள் என்பவற்றுக்காக நியமிக்கப்பட்ட சிறப்புக்குழுவின் தலைவராகவும் இவர் நியமிக்கப்பட்டார். இவ்வாறான இவரின் கடந்த கால திறமைகளை கச்சிதமாகப் பயன்படுத்திய அரசியலமைப்பு சபை ஒரே பிடியாக நின்றது.
நிலந்தஜெயவர்தன, லலித் பத்திநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோருக்கு மத்தியிலும் தென்னகோனை நியமிப்பதை தவிர ஜனாதிபதிக்கு வேறு வழியிருக்கவில்லை. 2020 நவம்பர் 17இல் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட சீ.டி.விக்ரமரத்னவின் மூன்று வருட பதவிக்காலம் 2023 மார்ச் 26 இல் முடிந்திருந்தது. இருந்தும் மும்மூன்று மாதங்களாக இரண்டு தடவைகள் இவரது சேவை நீடிக்கப்பட்டது. கடைசி ஆசைக்காக மூன்று வாரங்கள் நீடித்தார் ஜனாதிபதி.
அரசியலமைப்பு சபையின் எதிர்ப்பையும் மீறி சீ.டி.விக்ரமரத்னவுக்கு பதவி நீடிப்பு ஏன் வழங்கப்பட்டது? ஜனாதிபதியின் சிறப்பதிகாரம் இவ்விடயத்தில் தலையிடுவதைத் தடுப்பதற்கு இப்போது மூன்று வருடங்களுக்கு மேல் எவரும் பொலிஸ் மா அதிபராக நீடிக்க முடியாதவாறு ஏற்பாடுகள் வரவுள்ளன. பாராளுமன்ற பலம் இல்லாதுள்ள நிறைவேற்றதிகாரத்துக்கு ஏற்படும் நிலைமைகளே இவை.
ஈஸ்டர் தாக்குலை தடுக்கத் தவறிய இவருக்கு பொலிஸ் மா அதிபர் பதவி வழங்கியதில் அதிருப்தி தெரிவித்துள்ளார் மெல்கம் ரஞ்சித். இது மட்டுமா, 2021.05.09 அரகல வன்முறைகளின் குற்றவாளியாக தென்னகோனை குற்றம்சாட்டியிருந்தார் சட்டமா அதிபர். இதுபற்றி 2022 இல் சீ.டீ.விக்ரமரத்தனவுக்கு அவர் அறிவித்திருந்த வரலாற்றுப் பதிவும் புறக்கணிப்பட்டுள்ளது. இவருக்கு எதிரான எழுத்து மூல மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துமிருந்தது.
அரகல ஆர்ப்பாட்டத்தில் ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட 17 கோடியே 85 இலட்சம் ரூபாவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இந்த தென்னகோன் இணங்கவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் கையளிக்குமாறு உத்தரவிட்டு ஒரு தரப்பை பாதுகாத்துவிட்டார். இத்தனை சமாச்சாரங்களுக்குள்தான் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் தென்னகோன்.
இவரின் திறமையை அளவிடுவதற்கான தகுதிகாண் காலமாக இந்த பதில் பொலிஸ் மா அதிபர் பதவி இருக்குமா? அல்லது முடியாமல்போய், மூன்று வருடங்கள் நிலைக்குமா? நீருக்குள் நெருப்பை கடத்தும் அடுத்த கட்ட களங்களில் உள்ளன இதற்கான பதில்.