ஐ. ஏ. காதிர் கான்
மேல் மாகாணத்திலுள்ள 13 தபால் நிலையங்கள் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படவுள்ளன.
போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணம் செலுத்துவதற்காகவே, இந்தத் தபால் நிலையங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன.
மக்களின் வசதிக்காக, தபால் திணைக்களமும் பொலிஸாரும் இணைந்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளன.
இதன்பிரகாரம், கொட்டாஞ்சேனை, கொம்பனிவீதி, பொரளை, வெள்ளவத்தை, ஹெவ்லொக் டவுன், தெஹிவளை, கல்கிசை, மொறட்டுவை, பாணந்துறை, களுத்துறை, பத்தரமுல்ல, நுகேகொட, சீத்தாவக்கபுர ஆகிய இடங்களில் உள்ள தபால் அலுவலகங்கள் தினமும் 24 மணி நேரமும் இயங்கும்.
பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணத்தை, எவ்வித அசௌகரியமும், தங்கு தடையுமின்றி, குறித்த தபால் நிலையங்களில் 24 மணி நேரமும் செலுத்த முடியும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.