கொழும்பு தலைநகரில் களமமைத்து தேசிய தமிழ்க் கவிஞர்களின் ஆளுமையை அடையாளப்படுத்தும்
வலம்புரி கவிதா வட்டம் எனும் வகவம் தனது 94 ஆவது கவியரங்கை கடந்த பௌர்ணமியன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடாத்தியது.
கவிஞர் பொன். தாட்சாயினி சர்மா 94 ஆவது கவியரங்கிற்கு தலைமைத் தாங்கினார். பிரபல இலக்கியவாதி
காரைக்கவி கந்தையா பத்மானந்தன்
சிறப்பதிதியாக கலந்து கொண்டார்.
வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நெறிப்படுத்திய நிகழ்வில் செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் வரவேற்புரை நிகழ்த்த பொருளாளர் ஈழகணேஷ் நன்றியுரை கூறினார்.
சிறப்பதிதியாக கலந்து கொண்ட காரைக்கவி கந்தையா பத்மானந்தன் அவர்கள்,
“நல்ல கவிஞனுக்கு அழகு இன்னொரு கவிஞனின் கவிதையை ரசிப்பது. ஆனால் பல கவிஞர்களுக்கு அந்த ரசனை இருப்பதில்லை. ஆனால் நான் இந்த வலம்புரி கவிதா வட்டத்தில் ஒவ்வொரு கவிஞரின் கவிதையையும் மற்றைய அனைத்துக் கவிஞர்களும் ரசித்ததைக் கண்டு மகிழ்ந்தேன். அது கவிதை செய்த வரம் என்று சொல்ல வேண்டும். வகவம் இன்றோடு 94 ஆவது கவியரங்கினை நடாத்தி சாதனைப் புரிந்துள்ளது என்றே சொல்வேன். ஏனெனில் கவிஞர்களை ஒருங்கிணைப்பது, அவர்களுக்காக நிகழ்ச்சிகளை அமைப்பது என்பதெல்லாம் இக் காலத்திலே சாத்தியப்படாத ஒரு விஷயம். ஒரு கவியரங்கத்தை நடத்துவதற்கு கவிஞர்களை தேடி பிடிப்பது இலகுவான ஒன்றல்ல. அந்த வகையில் பல சிரமங்களுக்கு மத்தியில் அதனை சாத்தியமாக்கி இன்று 94 ஆவது நிகழ்வை நடாத்திக் கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. நூறாவது கவியரங்கும் சிறந்த முறையில் நடக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். தமிழ் வளர வேண்டுமாக இருந்தால் நாங்கள் தமிழில் பேச வேண்டும், தமிழில் எழுத வேண்டும், தமிழில் உசாவ வேண்டும். இலக்கியங்கள் மூலமாகத்தான் மொழியை காத்துக் கொள்ளலாம். அந்த வகையில் கவிதை எழுதுவதும், கவிதை சொல்லுவதும், கவிதை கேட்பதும், கவிதை ரசிப்பதும் எங்களது தமிழை தக்க வைத்துக் கொள்ள உதவும். அவ்வாறு எமது தமிழைத் தக்க வைத்துக்கொள்ள உதவும் வகையில் கவிதையை ஒரு கருவியாக பயன்படுத்துகின்ற வலம்புரி கவிதா வட்டத்தை வாழ்த்து மகிழ்கிறேன் ” என்று உரையாற்றினார்.
கவிஞர் தாட்சாயினி சர்மாவின் தலைமையிலே நடைபெற்ற கவியரங்கில் கவிஞர்கள் எம். பிரேம்ராஜ்,வெலிப்பன்னை அத்தாஸ், வதிரி சி. ரவீந்திரன், ராஜா நித்திலன், சிந்தனைப் பிரியன் முஸம்மில், மஸீதா அன்சார், மினுவன்கொட ஏ. சிவகுமார், எஹலியகொட முஸ்னி முர்ஷித், எஸ். யூ. கமர்ஜான் பீபி,
ரிம்ஸாடீன், எம். ஏ. ரஹீமா, ஆர்.எஸ். ரஸ்மியா, இ. கலைநிலா , கிண்ணியா அமீர் அலி, ஆர். தங்கமணி, பி.தங்கவேலு, ஆகியோர் கவிதை வாசித்தனர்.
எம்.எஸ்.எம்.ஜின்னா, சு.ஜெகதீஸ்வரன், எம்.பீ.எம்.சித்தீக்,மலாய்கவி டிவாங்ஸோ நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், அமல் பாண்டியன், கவிதா இளங்கோ, உணர்ச்சிப் பூக்கள் ஆதில் போன்றோர் சபையை அலங்கரித்தனர்.