ஐ. ஏ. காதிர் கான் –
( மினுவாங்கொடை – கட்டுநாயக்க செய்தியாளர் )
கம்பஹா – தங்கோவிட்ட, ஹொரகஸ்மன்கட பிரதேசத்தில் உள்ள இறப்பர் கை மற்றும் காலுறைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தங்கோவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடீரென தீ பரவியதையடுத்து, கம்பஹா மாநகர சபையின் தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகள் தீயை அணைக்க முயற்சித்த போதிலும், வத்துபிட்டிவல முதலீட்டு வலயத்திலிருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களும், கொழும்பு மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்களும் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு அனுப்பப்பட்டன.
இதையடுத்து, தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், இன்று (28) காலை வரை தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இன்று 28 ஆம் திகதி மாலை நிலவரப்படி, இதுவரை தீயினால் எவ்வித உயிர்ச்சேதங்களோ, காயங்களோ ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லையென தங்கோவிட்ட பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.