ஐ. ஏ. காதிர் கான் –
( மினுவாங்கொடை – கட்டுநாயக்க செய்தியாளர் )
நீர்கொழும்பு பொலிஸாரால், இராகலை நகரில் வைத்து கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட ஹாட்வெயார் ஒன்றின் உரிமையாளர், நீர் கொழும்பு சிறைச்சாலையில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று, நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதிவாகியுள்ளது.
இராகலை மத்திய பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோவிந்தசாமி கிருஷ்ணகுமார் (வயது 40) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக, சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு (27) திங்கட்கிழமை உயிரிழந்த குடும்பஸ்தரின் உடல், நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதணைக்காக வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள அவரது மனைவி வடிவேல் விஜயகௌரி, தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும், வைத்தியசாலையில் இடம்பெற்ற விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இராகலை தோட்டம் மத்திய பிரிவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி கிருஷ்ணகுமார். இராகலை நகரில் சுமார் எட்டு வருடங்களாக ஹாட்வெயார் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இவர், நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம், தனது கடைக்கு சுமார் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களைக் கடனாகக் கொள்வனவு செய்துள்ளார்.
இவர் பெற்ற கடனைச் செலுத்துவதில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இவருக்கு எதிராக நீர்கொழும்பு நீதிமன்றில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டு, வர்த்தகருக்கு வழங்கப்பட வேண்டிய கடன் பணத்தை தவணை முறையில் செலுத்தியும் வந்துள்ளார்.
இருப்பினும், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பிரதிவாதியான கோ. கிருஷ்ணகுமார் இரண்டுமுறை ஆஜராகாத நிலையில், அவருக்கு நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, நீர்கொழும்பு பொலிஸார் கடந்த (23) வியாழக்கிழமை அன்று இராகலை நகருக்கு கார் ஒன்றில் வருகை தந்து, ஹாட்வெயார் வர்த்தகரான கிருஷ்ணகுமாரை கைது செய்து, அவரை இராகலை பொலிஸ் நிலையத்தில் ஆஜர் செய்துள்ளனர்.
இராகலை பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கிருஷ்ணகுமாரை வலப்பனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இவரை (29) புதன்கிழமை வரை விளக்க மறியலில் வைக்க நீதனான் உத் தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் பதுளை சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் அடுத்த நாள் (24) வெள்ளிக்கிழமை பதுளை சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்ட குடும்பத்தார், கிருஷ்ணகுமாருக்குத் தேவையான பொருட்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இதேவேளை, தன்னை நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப் போவதாகவும், அங்கு தன்னை பிணை எடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், கிருஷ்ணகுமார் தெரிவித்ததாக குடும்பத்தார் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில் (26) ஞாயிற்றுக்கிழமை இரவு இராகலை பொலிஸார் இருவர், கிருஷ்ணகுமாரின் வீட்டுக்கு வருகை தந்து, கிருஷ்ணகுமார் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தூக்கிட்டு தன்னுயிரை மாய்த்து கொண்ட நிலையில், சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கிருஷ்ணகுமாரின் மனைவி விஜயகௌரி மற்றும் கிருஷ்ணகுமாரின் சகோதரர்கள் இருவர் (27) திங்கட்கிழமை அதிகாலை நீர்கொழும்புக்குச் சென்று வைத்தியசாலையில் பிரேத பரிசோதணைக்காக வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணகுமாரின்
உடலைப் பார்வையிட்டு, மரண விசாரணைக்காக அங்கு வருகை தந்திருந்த நீர்கொழும்பு மாவட்ட நீதவான் முன்னிலையில் அடையாளம் காண்பித்துள்ளார்.
இதன்போது, தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக, கிருஷ்ணகுமாரின் மனைவி நீதவானிடம் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நீதனான், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து, நீதி மன்றத்திற்கு பொலிஸார் விரைவாக அறிக்கை சமர்பிக்குமாறும், சடலத்தை பிரேத பரிசோதணையின் பின் உறவினர்களிடம் கையளிக்குமாறும் உத்தரவிட்டதாக, உறவினர்கள் தெரிவித்தனர்.