சுஐப்.எம்.காசிம்-
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பர்களும் இல்லை. இதற்கு நாட்டின் இன்றைய அரசியல் களங்கள் நல்லதொரு சாட்சி. மக்களாணையால் வெற்றியீட்டிய ஜனாதிபதி ஒருவர், மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவருக்கு ஆட்சியை கைமாற்றியிருந்தார். உறவும் பகையும் அரசியலில் பிணைக்கப்பட்டுள்ள விதம் இதிலிருந்து புரிகிறது. நெருக்கடி நேரத்தில் உதவிய இந்த நட்பு இன்னும் நீடிக்கவே போகிறது. பட்ஜெட்டின் இரண்டாம் வாசிப்பு வெல்லப்பட்டிருப்பதிலிருந்து இதைப் புரிந்துகொள்ளலாம்.
ரணிலை எச்சரிக்குமளவுக்கு இந்த பட்ஜெட்டை பாவிப்பதற்குக்கூட பொதுஜன பெரமுன துணியவில்லை. வெளியாகியுள்ள தீர்ப்பும், எதிர்க்கட்சிகள் சூட்டியுள்ள பொருளாதார படுகொலையாளிகள் என்ற நாமமுமே இதற்கு காரணம். இந்தப் பெயரும் நீதிமன்றத் தீர்ப்பும் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரவேண்டிய அவசியத்தை அல்லது ஆபத்தை இவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான், எதிர்வரும் தேர்தல்களிலும் இந்த நட்பு நீடிக்கலாம் என்கிறேன். எனினும், நேரடியாக வர முடியாத சூழ்நிலையில் மறைமுகமான முயற்சிகளே முடுக்கிவிடப்படவுள்ளன. இதன் வெளிப்பாடுகள் படிப்படியாக வெளிவரத் தொடங்கியும்விட்டன.
தேர்தலுக்காக 10 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதென்ற அறிவிப்பு, அடுத்த வருடம் இரண்டு தேர்தல்கள் நடத்தப்படுமென்ற அறிவிப்பு மேலும், பொதுஜன பெரமுனவின் ஆதரவில் பட்ஜெட் வெல்லப்பட்டதெல்லாம் இவற்றையே ஐதீகம் கூறுகின்றன. ரணிலுக்கும் பெரமுனவுக்கும் உடன்பாடு வரப்போகிறதென்ற செய்தியும் இந்த வெளிப்பாடுகளில் வெளிப்பட்டுள்ளன. முதலாவது ஆட்டத்திலே வெற்றியை எட்டும் வியூகங்கள்தான் இன்றைய களத்துக்கு பொருத்தம். இதனால், முதலில் தடுப்பாட்டத்தை தெரிவதே இவர்களுக்கு உள்ள வழி. இலக்கை நோக்கி ஆடுவதற்கு ஓட்டங்கள் தெரிய வேண்டுமல்லவா? எனினும், நாணய சுழற்சியில் வெல்ல வேண்டுமே! இந்த நாணயம் இப்போதைக்கு நிறைவேற்றதிகாரத்தின் கரங்களில் உள்ளதால் பொதுத் தேர்தலே பொருத்தமென்று வரும்.
கைமாறப்பட்டுள்ள அதிகாரத்தின் பலத்தில், பாராளுமன்றத் தேர்தலை நடத்தி, “நீ பாதி, நான் பாதி” என்ற பலத்துக்கு வந்த பின்னரே அடுத்த ஆட்டம் ஆரம்பமாகவுள்ளது. இதனால், அரசாங்கத்தை அமைக்கும் பங்கில் பாதியைப் பெறுமளவுக்கு பொதுஜன பெரமுன உழைக்கும். இந்தளவுக்கு முடியாவிடினும் இரவல் அதிகாரத்தில் இனியும் இல்லை என்பதை நிரூபிக்க ஐக்கிய தேசியக் கட்சியும் உழைக்கும். கூட்டு உழைப்பு என்பதால் இங்கு வெடிப்புக்கோ அல்லது பிளவுக்கோ சாத்தியங்கள் இல்லாமலேயாகும்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் எழும் சங்கடங்களால்தான், அடிக்கடி அறிக்கைகள் உருமாறி ஒலிகளை எழுப்புகின்றன. இத்தேர்தலை நடத்தி “கிளீன்போல்ட்” ஆவதை விடவும் மோதிப்பார்க்க பொருத்தமான முடிவே இது. “கிளீன்போல்ட்” என்று உறுதியாகச் சொல்ல முடியாவிடினும், பொருளாதாரப் பாதிப்புக்கள் முடிவுகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தினால் கதியென்ன?
பாராளுமன்றத்தில் இடம்பெறும் அநாகரீகங்கள் பழிவாங்கல்களின் மன விகாரங்களைத்தானே காட்டுகின்றன. மட்டுமல்ல, மக்களின் மனநிலைகளை அளவீடு செய்ய ஒரு ஆயத்தம் அவசியம். இந்த அளவீடாகவே பொதுத் தேர்தலுக்கு அழைப்பு வரப்போகிறது. மொட்டுவின் தற்போதைய திட்டம் இதுதான். இதனால், பொதுஜன பெரமுன இனியும் வாய் மூடி, வாளாதிருக்கப்போவதில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இத்திட்டம் பிடிக்காமலிருக்காது. உள்ள ஒற்றை இலக்கத்தை இரட்டை இலக்கமாக அதிகரிக்க ஏற்ற வழியும் இதுதானே! கட்சியை அழித்தவர் என்ற பழியிலிருந்து ரணிலைப் பாதுகாக்கவும் இத்திட்டம் கைகொடுக்கலாம்.
பட்ஜெட்டின் இறுதி வாக்கெடுப்பும் வெல்லும் என்பதை இலகுவில் ஆரூடம் கூறும் கணக்கீடுகளே இவை. ஆனால், பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட நெருக்கடியை அரசியல் முதலீடாக மாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ள எதிர்க்கட்சிகளுக்கும் இந்த முடிவு சவாலாகவே அமையும். ஒட்டுமொத்தமாக எதிர்ப்பைக் கொட்டித்தீர்க்க இரு முனைப்போட்டிகள் நிலவவில்லையே!
பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பட்ட பிரபலங்களின் செல்வாக்குகள், பிரதேச போட்டிகள், மாவட்டத் தலைமைகளுக்கான போட்டிகளென பல வகைகள் உள்ளன. இந்த பல வகைகளுக்குள் பொது எதிரியை அடையாளம் காண்பது அரிதாகவே போகும். இதனால்தான், தடுப்பாட்டம் முதல் வரப்போகிறதோ! எப்படியோ ஒரு ஆட்டத்துக்கு தயாராக வேண்டிய தருணத்தில் நாட்டின் நிலைமைகள் உள்ளன.
சர்வதேச உதவிகளை இன்னும் நம்பியுள்ள நமக்கு, ஜனநாயகத்தோடு விளையாட இயலாதுள்ளது. மக்களாணைக்கு முரணான அரசாங்கங்களை சர்வதேசம் கண்டுகொள்வதுமில்லை, கணக்கெடுப்பதுமில்லை என்பதால்தான்,
நாட்டின் ஆடுகளங்கள் ஆயத்தப்படுத்தப்படுகின்றன. அரசியலில் மட்டுமல்ல விளையாட்டு ஆடுகளங்களையும் தரமுயர்த்தும் தேவையிலுள்ள நிலையில் வரப்போகும் தேர்தல் எப்படியிருக்கும்?
ஏற்கனவே, கூறியதுபோல நண்பர்களும், பகைவர்களும் நாணலென வளையும் அரசியலில், ஐக்கிய மக்கள் சக்தியும் மற்றும் தேசிய மக்கள் சக்தியும் எதையும் செய்யலாம். இலக்குகளை அடைவதில்தான் அம்புகள் குறியாக இருக்கும் என்பதைப் போல. வேட்டைக்காரன் வழித்தடங்கள் பார்த்து காட்டுக்குப் போவதில்லையே! என்னவோ, கர்மவினைகள் கண்டுகொள்ளாமலா விடும்!