ஐ. ஏ. காதிர் கான் –
( மினுவாங்கொடை – கட்டுநாயக்க செய்தியாளர் )
இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 168 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அத்துடன் 16 வயதுக்குட்பட்ட 22 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாகவும், அரசாங்க நிதி பற்றிய குழுவின் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
அண்மையில் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தலைமையில், இது தொடர்பிலான குழு நாடாளுமன்றில் கூடிய போதே இந்த விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
இம்முக்கிய கூட்டத்தில், ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் அறக்கட்டளை உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, பாடசாலை மாணவிகள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும், விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், சுகாதார வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகள் தேவைப்படும் பாடசாலை மாணவிகளின் எண்ணிக்கையைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான கட்டமைப்பைத் தயாரிப்பது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், பாடசாலை மாணவர்களுக்கான பாலியல் கல்வியை வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை உருவாக்குவது மிகவும் அவசிய அவசர தேவை எனவும், இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சுகாதார வசதிகள் அவசியமான பாடசாலை மாணவிகளின் எண்ணிக்கையை சரியாக அடையாளம் காண்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பொறி முறையொன்றைத் தயாரிப்பது குறித்தும், அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.