கலாபூஷணம் பரீட் இக்பால்
யாழ் மண்ணில் பிறந்து நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்களின் கல்விக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் பொதுநல சேவைகளுக்காகவும் தனது வாழ்வையே அர்ப்பணித்த ஒருவர்தான் கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் ஆவார்கள்.
யாழ்ப்பாணம், சோனக தெருவில் கீர்த்தி மிக்க குடும்பமான சட்டத்தரணியும் காதியாருமான அபூபக்கர்- சுல்தான் முஹம்மது நாச்சியா தம்பதியினருக்கு மூத்த புதல்வராக எ.எம்.எ. அஸீஸ் 1911 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி பிறந்தார்.
ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களின் தகப்பனார் அபூபக்கர் அவர்கள் புகழ் பெற்ற புலவர் திலகம் சு.மு. அஸனா லெப்பையின் சகோதரராவார். தந்தை அபூபக்கர் அவர்கள் யாழ்ப்பாண நகரசபை உறுப்பினராக பல வருடங்கள் சேவையாற்றினார். 1941 இல் யாழ்ப்பாண நகரசபையில் உப தலைவர் பதவியையும் அலங்கரித்தவர். இன்றும் இவரது பெயரில் காதி அபூபக்கர் வீதி என்று ஒன்று உள்ளது.
ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்களின் சகோதரி ஷரீபா அவர்களை முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை மேயரும் சட்டத்தரணியும் குவாஸியுமான எம்.எம். சுல்தான் அவர்கள் திருமணம் செய்தார்கள். சிறுபராயத்தில் அஸீஸ் மீது பாசமும் பரிவும் காட்டியவர்களில் சு.மு. அஸனா லெப்பை புலவர் மிக முக்கியமானவர். புலவர் அஸனா லெப்பை மீது ஏ.எம்.ஏ. அஸீஸ் பெருமதிப்பு வைத்திருந்தார். அஸீஸின் ஆய்வு ஆர்வத்தை தூண்டியதில் சு.மு. அஸனா லெப்பைக்கு முக்கிய பங்கு உண்டு.
அஸீஸ் தனது ஆரம்பக்கல்வியை குர்ஆனும் தமிழும் சேர்த்து கற்பிக்கப்பட்ட அல்லா பிச்சை பள்ளியில் (முஹம்மது முஸ்லிம் கலவன் பாடசாலை) ஆரம்பித்தார். குர்ஆன் பள்ளிக்கூட கல்வியை நிறைவு செய்துகொண்டு, திட்டமிட்டபடி 1921 இல் வண்ணார் பண்ணை இராமகிருஷ்ண மிஷன் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் தமது கல்வியை அஸீஸ் ஆரம்பித்தார். சாரம், தொப்பி முதலிய இஸ்லாமிய கலாசார உடையுடன் அஸீஸ் அப்பள்ளிக்கூடம் சென்றார். சுமார் இரண்டு வருடங்கள் மட்டுமே வைத்தீஸ்வராவில் கல்வி கற்ற போதும் கல்வி, ஒழுக்கம், நற்பண்புகளின் வளர்ச்சி என்பவற்றில் தம்மை சிறப்பாக வழிநடாத்திய கல்வி நிலையம் என வைத்தீஸ்வரா வித்தியாலயம் பற்றி அஸீஸ் தமது குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். பின்னர் அஸீஸின் இடைநிலைக் கல்வி யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் 1923 இல் 06 ஆம் வகுப்பில் ஆரம்பமானது. யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் அஸீஸ் முதல் முஸ்லிம் மாணவராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1929 இல் அவர் பல்கலைக்கழக பிரவேசத்திற்காக தேர்ந்தெடுக்கப்படும் வரை அவரது கல்வி வாழ்வு யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் நீடித்தது. வீட்டுச் சூழலும் வைத்தீஸ்வரா மற்றும் இந்துக் கல்லூரி பிரவேசங்களும் அஸீஸ் தமிழிலும் நல்ல பயிற்சியை பெற்றுக்கொள்ள வாய்ப்பை அளித்தன. பிற்காலத்தில் அவர் தமிழ் மொழியிலும் சிறந்த பேச்சாளரகவும் எழுத்தாளராகவும் விளங்க அவரது இக்கல்லூரிகளின் தொடர்புகளும் பக்கபலமாக இருந்துள்ளன. 1929 இல் இலங்கை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வரலாற்று துறையை சிறப்பு பாடமாக தெரிவு செய்து 1933 இல் வரலாற்றில் (B.A.,Hons) சிறப்புப் பட்டத்தை பெற்றார். வரலாற்று துறையில் அவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக இலங்கை அரசாங்கம் 1933 இல் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புனித கத்தரின் கல்லூரியில் வரலாற்று துறையில் மேற்படிப்பை தொடர்வதற்கு புலமைப் பரிசில் வழங்கியது. அவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறையில் சிறப்பு பட்டம் பெற்றார். இவர் இலங்கை சிவில் சேவையாளருக்கான தேர்விலும் சித்தி பெற்றார். இலங்கை நிர்வாக சேவையில் சித்தியடைந்த முதலாவது முஸ்லிம் இவரே ஆவார்.
கொழும்பில் பாரசீக கொன்ஸலராக கடமையாற்றிய எம்.ஐ. முஹம்மத் அலியின் பேர்த்தியும், இலங்கை சட்ட நிரூபண சபையின் முதலாவது முஸ்லிம் அங்கத்தவரான எம்.ஸி. அப்துல் ரகுமானின் பூட்டியுமான உம்முகுல்தூம் என்பவரை 1937 இல் அஸீஸ் திருமணம் செய்தார். அஸீஸ் தம்பதியினர் மரீனா சுல்பிக்கா, முஹம்மத் அலி, இக்பால் ஆகியோரைப் பெற்றெடுத்தனர். அஸீஸ்- உம்முகுல்தூம் திருமணப் பந்தம் நட்புறவுடன் கூடிய குடும்ப பாசமாக இறுதி வரை பிரகாசித்தது. அஸீஸின் வெற்றிகளின் பின்னணியில் உம்முகுல்தூமின் நிறைவான ஒத்துழைப்பும் அன்பும் ஒன்று கலந்திருந்தது.
1942 இல் அஸீஸ் உதவி அரசாங்க அதிபராக கல்முனையில் சேவையில் இருக்கும் காலத்தில் அரசாங்க கடமைகளோடு, பொதுநல ஈடுபாடு, மக்கள் சேவை, வரலாற்று ஆய்வுகளுக்கான தகவல்களை சேகரித்தல் போன்ற பல பணிகளை அவர் முன்னெடுத்தார். இக்கால கட்டத்தில் சுவாமி விபுலானந்தருடனும், இஸ்லாமிய மற்றும் கல்வி எழுச்சிகளையும் பற்றி பாடிவந்த மூத்த முஸ்லிம் கவிஞரான காத்தான்குடி அப்துல் காதர் லெப்பையுடனும் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தார்.
1943 இல் அஸீஸ் மாற்றலாகி கண்டியில் தனது பணிகளை ஆரம்பித்தார். கண்டியில் தனது அரச பணிகளுக்கு மத்தியில் பொதுப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டதோடு படித்த மற்றும் வர்த்தக பிரமுகர்களுடனும் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டார். அதன் விளைவுகளாக இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தை (YMMA) ஸ்தாபிப்பதிலும் அவர் வெற்றி கண்டார்.
முஸ்லிம் மாணவர்களின் கல்வியானது வறுமையினால் தடைபடக் கூடும் என்று உணர்ந்த அஸீஸ் 1945 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதி (Ceylon Muslim Scholarship Fund) என்ற நிதி நிறுவனத்தை கொழும்பில் உருவாக்கினார். இன்றும் அது இயங்கிக் கொண்டிருக்கிறது.
அஸீஸ் அவர்கள் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அதிபராக 1948 ஆம் ஆண்டிலிருந்து 1961 வரை தலைமைப் பொறுப்பை நிறைவேற்றி இருந்தார். தனது அயராத உழைப்பினாலும் நிர்வாக திறமையினாலும் ஆக்கத் திறன் மிக்க நவீன கல்வித் திட்டங்களினாலும் அஸீஸ் ஸாஹிராவை இந்த நாட்டின் மிகப் பெரும் முஸ்லிம் கல்வி ஸ்தாபனம் ஆக்கினார். கல்வியில் மட்டுமன்றி விளையாட்டுத் துறை சாரணியம், கெடற், பேச்சுத் திறன், மொழியலங்காரம், விவாதம், இலக்கிய ஆற்றல், தொழிற்கல்வி என்று எல்லாத் துறைகளிலும் ஸாஹிரா அதன் உன்னத நிலையை அவர் காலத்தில் நிரூபித்தது. சிறந்த கல்வி போதனை, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, மாணவர்களின் ஒழுக்க மேம்பாடு அனைத்திலும் அஸீஸ் திறம்பட உழைத்தார். கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் இவரது பதவிக் காலம் பொற்காலமாக அமைந்திருந்தது.
1952 இல் அஸீஸ் அகில இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்த போது ஸ்மித் – மண்ட் புலமைப் பரிசில் பெற்று அமெரிக்காவில் ஆறு மாதங்கள் பயிற்சி பெற்று திரும்பினார். இப்பயிற்சியை பயன்படுத்தி ஸாஹிராவில் அஸீஸ் ஆற்றி வந்த கல்விச் சேவைகளும் அறிமுகப்படுத்திய புதிய கல்வித்திட்டங்களும் ஸாஹிராவின் வளர்ச்சிக்கு மட்டுமன்றி, பொதுவாக இலங்கை முஸ்லிம்களின் கல்விச் சிந்தனைக்கும் முன்னேற்றத்திற்குமான பங்களிப்பாகவும் விளங்கியது.
ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் அரசாங்கத்தில் 1952 தொடக்கம்1963 வரை செனட்டராகவும் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்கள் 1973 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி காலமாகும் வரை கல்விக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் பொதுநல சேவைகளுக்காகவும் தனது வாழ்வையே அர்ப்பணித்திருந்தார்.
இன்றுடன் அவர் காலமாகி 50 வருடங்கள் ஆகின்றன.
ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களை கௌரவிக்கும் முகமாக இலங்கை அரசாங்கம் 1986 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி முத்திரை வெளியிட்டது.
ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களின் கொழும்பில் ஸ்தாபித்து வைத்த இஸ்லாமிய இளைஞர் இயக்கம் (YMMA) இன்று 150க்கும் அதிகமான கிளைகளுடன் நாடு முழுவதும் பரவிய நிலையில் செயலாற்றி வருகிறது. ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களின் ஆலோசனைகளின் படி கல்வி முன்னேற்றம், சுகாதார அபிவிருத்தி, பாதை திருத்தம், அநாதைகள் பராமரிப்பு, கலாசார வளர்ச்சி உட்பட பல பொதுநல சேவைகளில் இச்சங்கங்கள் ஈடுபட்டு வருகின்றன. யாழ் மண்ணில் பிறந்த கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் போன்று மாமேதைகள் மேலும் உருவாக வேண்டும்.
கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்.