விடுதலை புலிகளின் பயங்கரவாதத்தை அழித்தவுடன் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்யாதது தவறு என்றும் அதற்காக அவர் வருந்துவதாகவும் முன்னாள் பொலிஸ் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் கூறியதை வன்மையாக கண்டிக்கிறேன். இப்படியான இனவாத சிந்தனை கொண்டோர்களின் நச்சுக்கருத்துக்களும், இனவாத செயற்பாடுகளினாலே இலங்கையில் 75 ஆண்டுகளுக்கு மேலாக இனப்பிரச்சினையை தீர்க்க முடியாதுள்ளது. இராணுவ சிந்தனையிலிருந்து ஜனநாயக சிந்தனைக்கு சரத் வீரசேகர வர வேண்டும் என ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,
சுலபமாக பேசித்தீர்க்கவேண்டிய இனநெருக்கடிகளை பயங்கரவாதமாக மாற்றுவதற்கு சிலர் எடுக்கும் எத்தனங்களை எண்ணி இலங்கையர்கள் என்ற வகையில் நாம் வருத்தப்பட வேண்டும். அத்துடன், தெற்கின் அரசியல் அதிகாரத்தை தென்னிலங்கை இளைஞர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்காமல் அதனை கிளர்ச்சியாகப் பெரிதாக்குவதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். எனவே இப்படியான செயல்களினாலும், எண்ணங்களினாலும் இலங்கையர்கள் ஆகிய நாம் இன்று பல்வேறு துறைகளில் பின் தங்கியுள்ளோம்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் அதிகாரத்தில் இருந்த சரத் வீரசேகர சிங்கள, தமிழ், முஸ்லிம், சமூகத்தினரிடையே இருந்த கடும்போக்குவாத சிந்தனைகளை தடை செய்திருக்க வேண்டும். ஆனால் மாற்றமாக அவர்களின் ஆட்சிக் காலத்தில் அரசியல் தேவைகளுக்காக சிங்கள, தமிழ் முஸ்லிம் சமூகம் மத்தியில் தமக்கு அரசியல் இலாபம் கிடைக்க வேண்டி கடும்போக்குவாத சிந்தனைகளை தலைதூக்க அனுமதித்ததுடன் அதனை வளர்த்தும் விட்டனர்.
கருணா அம்மான், பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா போன்ற அவர்களுக்கு ஆதரவானவர்கள் கூட கேட்கும் அரசியல் தீர்வை வழங்குவதற்கு பதிலாக தமிழ்ச் சமூகத்தினரிடையே அரசியல் கருத்தியல் மோதல்களை அதிகப்படுத்தி காலத்தை வீணடித்துள்ளனர் என்பதே உண்மை. அத்துடன் ரவூப் ஹக்கீம், றிசாத், அதாவுல்லா, ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களை கொண்டு முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் பிரிவினைவாதத்தை உண்டாக்கி தீர்வை நோக்கி நகர விடாமல் தடுத்ததுடன் அதற்கு மேல் ஒரு படிசென்று முஸ்லிம் – தமிழ் சமூகங்களுக்கிடையில் அரசியல் பிளவுகளை ஏற்படுத்தினர். இதனாலேயே பிற சமூகங்களில் இருந்து கடும்போக்குவாத சிந்தனையாளர்களும், கிளர்ச்சியாளர்களும் பிறந்ததைப் போன்று முஸ்லிம் சமூகத்தினரிடையேயும் பிறந்தனர்.
அத்துடன், 69 இலட்சம் வாக்குகளின் மூலம் கடந்தகாலங்களில் அதிகாரத்தை கைப்பற்றிய சரத் வீரசேகர ஆதரவளித்த அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை, பாராளுமன்ற பாதுகாப்பு தெரிவுக்குழு அறிக்கை, ஈஸ்டர் தெரிவுக்குழு அறிக்கை போன்றவற்றின் சிபாரிசுகளை சட்டரீதியாக அமுல்படுத்த முதுகெலும்பு இல்லாதது தீவிரவாதத்தை நோக்கிய இவர்களது திராணியற்ற கொள்கையை உணர்த்தியது. எனவே, ஜனநாயக நீரோட்டத்தில் சித்தாந்த ரீதியாக போராடும் அரசியல் அமைப்புக்களையும், கட்சிகளையும் அடக்கி அல்லது தடை செய்வதன் மூலம், இவ்வாறான இயலாமையை வெளிப்படுத்திய சரத் வீரசேகர மேலும் பிரிவினைவாத சித்தாந்தங்களை வலுப்படுத்தி தீவிரவாத பயங்கரவாதத்திற்கான பாதையை மீண்டும் திறக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.
நாம் எல்லோரும் ஒன்றிணைந்து அரசியலில் அதிகார இணக்கப்பாட்டுக்கு வராவிட்டால் இலங்கையின் அமைவிடம் காரணமாக பூகோள அரசியல் உந்துசக்தியாக அமைந்து சர்வதேசம் தலையீடு செய்து இன நெருக்கடியை இன்னும் வலுப்படுத்த கூடிய வாய்ப்புக்கள் உள்ளது. இதற்கு சந்தர்ப்பம் கொடுக்காமல் இலங்கைத் தேசமாகிய நாம் ஒன்று கூடி 100 ஆவது சுதந்திரத்திற்கு முன்னர் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டு நல்லிணக்கத்துடன் அபிவிருத்தி செய்து ஆசியாவில் வல்லரசாக மாற வழி வகுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.