இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு
துவாய் பொதியில் மறைத்து வைத்து இறக்குமதி செய்யப்பட்ட 27 கோடி ரூபா பெறுமதியான ஹெரோய்ன் போதைப் பொருளுடன் மூவர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட சுங்க அதிகாரியும் சுங்க பேச்சாளருமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.
பாகிஸ்தான் நாட்டின் லாகூரிலிருந்து இலங்கைக்கு விமான மூலம் இறக்குமதி செய்யப்பட்ட துவாய் ( towel) பொதியிகளை கட்டுநாயக்க போதைப் பொருள் தடுப்பு சுங்க பிரிவினரும் விமான பொதிகள் முனைய சுங்க அதிகாரிகளும் இணைந்து பரிசோதனை நடாத்தினர்.
இறக்குமதி செய்யப்பட்ட அந்த எட்டு துவாய் பொதிகளின் மத்திய பகுதியில் மறைத்து வைத்திருந்த ஹெரோய் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 10.5 கிலோகிராம் ஹெரோய்ன் இருந்துள்ளதுடன் அதன் பெறுமதி 27 கோடி ரூபா என சுங்க பேச்சாளர் தெரிவித்தார்.
திகாரிய பிரதேச விலாசத்திற்கு அனுப்பப்பட்ட இப்பொருட்களை எடுத்துச்செல்ல வந்த இறக்குமதியாளரும் இரு முகவர்களும் அப்போது சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேநபர்களும் போதைப் பொருள் தொகுதியும் மேலதிக விசாரணைக்காக போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.