இஸ்மதுல் றஹுமான்
சட்டம் இயற்றும் இடமான பாராளுமன்றம் இன்று கொல்லம் கொட்டகையாக மாறிவருவதை அவதானிக்கமுடிகின்றது.
பாராளுமன்ற அமர்வுகளின் போது நடப்பவற்றை பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்ற நிலைமை ஏற்பட்டுள்ளதுசம மஹா. அரசியல் என்றால் சாக்கடை என்பார்கள். அது தற்போது நாடாளமன்றத்தின் ஊடாக நிறுபிக்கப்படுகின்றன.
சில உறுப்பினர்களின் அன்மைக்கால செயற்பாடுகளை நோக்கும்போது அவை கேலிக்கூத்தாக மாறியுள்ளன. சபைக்கு பொறுத்தமற்ற வார்த்தைப் பிரயோகங்கள், ஒருவர் மீது இன்னொருவர் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துவது, ஒருவரை ஒருவர் வம்புக்கு அழைத்தல்,
பெண்கள் துஷ்பிரயோக வார்த்தைகள் இப்படி அடிக்கிக் கொண்டே செல்லலாம்.
தமது பிள்ளைகளுக்கு முன்பாக பெற்றார் சண்டையிடவோ மோசமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்ளவோ கூடாதென சகல மதங்களும் வழியுறுத்துகின்றன. இவ்வாறான நிலையில் தமது கல்விக்கான தகவல்களை பெறும் நோக்கில் வருகை தருகின்ற பாடசாலை மாணவர்கள் பாராளுமன்ற கலரியில் அமர்ந்து சபை நடவடிக்கைகளை அவதானிக்கும் போது சபையிலோ மாணவர்களுக்கு எந்த முன்மாதிரியையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை.
சபையில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் அசிங்கமான சம்பவங்கள் அரங்கேறும் போது அவசர அசரமாக கலரியில் உள்ள மாணவர்களை அப்புறப்படுத்துவது முறையல்ல. மாணவர்கள் வந்துள்ள நோக்கத்தை அடைந்துகொள்ளும் விதத்தில் ஒழுக்க விழுமியங்களை கடைபித்து எம்பிக்கள் நடந்துகொள்ள பழக வேண்டும்.
நாடாளுமன்ற அமர்வுகளை அவதானிப்பதற்காக பாடசாலைகள் முன்கூட்டியே நேரங்களை ஒதுக்கிக்கொண்டே மாணவர்களை அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் சபையில் இடம்பெறும் மோசமான காட்சிகளினால், வந்தவுடனே மாணவர்கள் திரும்பிப் செல்லும் நிலைமை ஏற்படுகின்றன.
பாராளுமன்ற உறுப்பினர்கள் நிலையியட் கட்டளைகளை பின்பற்றுவதாக தெரியவில்லை. பாராளுமன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்தி எதையும் பேசமுடியும் என்றாலும் தமது பேச்சில் உண்மையான தகவல்களையே வெளிப்படுத்த பழகிக்கொள்ள வேண்டும்.
எதிர் கட்சிகள் சபை ஆரம்ப நேரத்தில் கேள்வி கேட்பதற்காக கூடுதல் நேரங்களை எடுத்து விபரங்களை அடுக்கிக்கொண்டு போவதனால் சபையின் அன்றைய நாளின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டப்படுகின்றது.
சபையில் நடக்கும் மோசமான செயற்பாடுகளை சில எம்பிக்கள் தமது கையடக்கத் தொலைபேசி ஊடாக பதிவு செய்து உடனுக்குடன் சமுக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். இதனால் சபையில் மேலும் கொந்தளிப்பு ஏற்படுகின்றது.
தமது அங்கத்தவர்கள் பாராளுமன்ற ஒழுக்க விழுமியங்களை கடைபித்து நடப்பதை அந்தந்த கட்சித் தலைவர்கள் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
சபை நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்கும் சபாநாயகர் மற்றும் அவ்வப்போது தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் பக்கசார்பின்றி நடுநிலையாக சபையை நடாத்த வேண்டும்.
சபைக்கு பொறுத்தமில்லாத முறையில் நடந்துகொண்டவர்களுக்கு சபாநாயகரால் தண்டனை வழங்கும் போது அது ஆளும்கட்சி எதிர்கட்சி என்ற வித்தியாசமின்றி இருக்கவேண்டும். சபாநாயகர் கதிரையில் உற்கார்ந்தால் தனது கட்சியை மறந்துவிட வேண்டும். இருசாராரையும் ஒரேமாதிரியே வழிநடத்த வேண்டும்.
முன்னைய கால நாடாளுமன்ற அமர்வுகளுடன் ஒப்பிடுகையில் அன்மைக்கால செயற்பாடுகள் கேள்விக்குறியாகவே உள்ளன. உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக உரிய செயல்அமர்வுகளை காலத்திற்கு காலம் நடாத்தி அவர்களை அறிவுறுத்த வேண்டும்.
முன் மாதிரியான சமுதாயத்தை உருவாக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்மாதிரியாக நடந்துகொள்வது காலத்தின் கட்டாய தேவையாகும்.