- ஐ. ஏ. காதிர் கான் –
( மினுவாங்கொடை – கட்டுநாயக்க செய்தியாளர் ) வெயாங்கொடை – கஹட்டோவிட்ட அல் பத்ரிய்யா மகா வித்தியாலய (அஷ்ரப் மாவத்தை) பின் நுழைவாயில் வீதி, பல வருடங்களாக குன்றும் குழியுமாகக் காட்சியளிப்பதால், இவ்வீதி வழியாக பயணிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக, பாடசாலை மாணவர்களும் பாதசாரிகளும் விசனம் தெரிவித்துள்ளனர்.
மழை காலங்களில் ஆங்காங்கே நீர் நிரம்பி வழிந்தோடுவதால், இவ்வீதியின் ஊடாக எவ்விதத்திலும் பயணம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
குறிப்பாக, மாணவர்கள் காலை வேளையில் பாடசாலைக்கு வரும் போது, இவ்வீதி சேறும் சகதியுமாக இருப்பதால், அவர்களுக்கு இவ்வீதி ஊடாக பயணிக்க முடியாமல் இருப்பதோடு, உடைகள் கூட அழுக்கடைந்து, இதனால் பெரும் அசௌகரியங்களுக்கும் இன்னல்களுக்கும் உட்படுவதாக மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது விடயம் தொடர்பாக, அத்தனகல்ல பிரதேச சபையிடமும், இப்பிரதேச அரசியல் கட்சிகளிடமும் பல முறை சுட்டிக்காட்டியும், இதுவரையிலும் எதுவித சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை என பிரதேசவாசிகள் அங்கலாய்க்கின்றனர்.
இது இவ்வாறிருக்க, கஹட்டோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த (பெயர் குறிப்பிட விரும்பாத) ஊர்ப்பிரமுகர் ஒருவர், இவ்வீதியை கொங்கிறீட் இட்டு செப்பனிட்டுத்தர களத்தில் குதித்துள்ள நிலையில், அவரது இப்பணிக்கு பக்க பலமாக கை கொடுத்து உதவ இதுவரை மூவர் முன்வந்துள்ளதாகவும், இவர்களால் சீமெந்து 30 பக்கட், மணல் 1 கியுப், கொங்கிறீட் கல் 1 கியுப் போன்றவற்றை வழங்குவதற்கான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், கஹட்டோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த சமூகசேவையாளர் அல்ஹாஜ் எம். பிர்தௌஸ் தெரிவித்தார்.
இது தவிர, மணல் 1 கியுப், கொங்கிறீட் கல் 1 கியுப், கற்கள் கலந்த மண் 3 கியுப் போன்ற மூலப்பொருட்களும் அவசியம் தேவைப்படுவதால், இவற்றையும் பெற்றுக் கொடுப்பதற்கு ஏனைய நல்லுள்ளம் படைத்தவர்களின் உதவிகளையும் தான் எதிர்பார்ப்பதாகவும், இதன் பயனாக குறித்த வீதியின் திருத்த வேலைகளை உடனடியாக ஆரம்பிக்க முடியும் எனவும், அல் ஹாஜ் எம். பிர்தௌஸ் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.
November 22, 2023
0 Comment
234 Views