கொழும்பு
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது, முன்னதாக திட்டமிட்டப்படி, இன்று முதல் தொடர்ச்சியாக இடம்பெறுமென முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த அகழ்வு பணிகள் இன்று காலை 8 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த முறை அகழ்வுபணி நடைபெறும்போது, ரேடர் கருவியை அனுமதியுடன் பரீட்சித்து பார்க்க எதிர்பார்த்துள்ளதாகவும், இதன் மூலம் எந்தளவு தூரத்திற்கு குறித்த புதைகுழி உள்ளது என்பதை அடையாளப்படுத்தி கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அகழ்வு பணிகளுக்கான 2.5 மில்லியன் ரூபா வரையிலான நிதி இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது எனவும் அந்த நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வுபணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இருக்கும் எனவும் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா குறிப்பிட்டுள்ளார்