சுஐப்.எம்.காசிம் –
மொண்டஸ்கியுவின் வலுவேறாக்கம் அரசியலுக்கு அவசியப்படும் விதங்கள் வௌிப்பட்டு வருகின்றன. நீதித்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டத்துறைகளுக்கிடையிலான அதிகாரப்பகிர்வுகள் ஒரு ஆட்சியில் ஜனநாயகம் நிலைப்பதில் பங்களிக்கிறது. இம்மூன்று துறைகளுக்கிடையில் மோதல்கள் நிலவும் காலங்களில் இதைக் காணலாம். சட்டத்தை இயற்றும் பாராளுமன்றம், நீதிவழங்கும் நீதிமன்றம் இன்னும் அரச இயந்திரத்தை இயக்கும் நிறைவேற்றுத்துறை என்பவற்றின் செயற்பாடுகளைத்தான் வலுவேறாக்கம் என வகைப்படுத்தியுள்ளார் மொண்டஸ்கிவ்.
ஐரோப்பாவில் வாழ்ந்த இவரின் அரசியல் சிந்தனைகள், இன்றைய நவீனகால அரசியலுக்கும் பொருந்துகிறது. மக்களாணையை மீறிச்செயற்படாத வகையில் அரசியல்வாதிகள் செயற்படுவதற்கு மொண்டஸ்கிவ் மூக்கணாங்கயிறு கட்டியுள்ள விதமே விந்தைதான். பெரும்பாலும் பிரதமரை தலைமையாகக் கொண்ட ஆட்சிமுறையிலேயே இந்த வலுவேறாக்கம் புரியப்படுகிறது. நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சியில், இதன் வகிபாகம் புலப்படாமல் பணியாற்றுகிறது.
நமது நாட்டில் நான்கு ஜனாதிபதிகளுக்கு எதிராக நீதித்துறை தீர்ப்பளித்திருப்பதில், இதைப்புரியலாம். 1994இல் ஊழலை ஒழிப்பதாக வெற்றியீட்டிய சந்திரிக்கா, 2005இல் பயங்கரவாதத்தை முடிப்பதாகக் கூறி வென்ற மஹிந்த, 2015இல் குடும்ப ஏகாதிபத்தியத்துக்கு முடிவுகட்டுவதாக ஆட்சிக்கு வந்த மைத்திரி மற்றும் 2019இல் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதாக ஜனாதிபதியான கோட்டாபய ஆகியோரே நீதித்துறையால் தீர்ப்பளிக்கப்பட்டனர். மக்களாணைக்கு முரணான இவர்களின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டதும் மக்கள்தான். உயிரிழப்பு, மன உளைச்சல், சொத்துச் சேதம், வறுமை மற்றும் பாதுகாப்பின்மை என பல வகையில் விரிகின்றன இந்தப் பாதிப்புக்கள்.
ஈஸ்டர் தாக்குதலால் அந்நியச் செலவாணி வீழ்ந்தது, கோட்டாவின் செயற்பாடுகளால் விவசாயம் வீழ்ந்தது, அபிவிருத்தியென்ற போர்வையில் வௌிநாட்டுக் கடன்களை பெற்றதால் மஹிந்தவின் படுகடன் ஏறியது. சந்திரிக்காவின் வோட்டர்ஸ் எட்ஜ் ஊழல் மக்களின் நம்பிக்கையில் கரியைப்பூசியது. இவற்றை எச்சரிக்கும் பாணியிலிருந்தன இவர்களுக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்புக்கள். வறுமையால் பாதிப்புற்றோரின் எண்ணிக்கை முப்பது இலட்சத்திலிருந்து எழுபது இலட்சத்துக்கு உயரும் வரை, நிறைவேற்றதிகார ஜனாதிபதிகளின் செயற்பாடுகள் இருந்துள்ளன. வீண்விரயம் என்றும் இது பொருள்படும்.
இப்போது, ஆமையின் தலையில் மலையைச் சுமத்தியது போலுள்ளது நாட்டின் பொருளாதாரம். குடும்பச் செல்வாக்கிலும், போரை முடித்த தீரத்திலும் ராஜபக்ஷக்களின் நிர்வாகம் இருந்ததால், துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் புறந்தள்ளப்பட்டன. இது பொருளாதரத்தை படுகுழியில் தள்ளியதால், ஆட்சியிலிருந்து புறந்தள்ளப்படுமளவுக்கு நிலைமைகள் தலைகீழாகின்றன. மக்களாணை மதிக்கப்படாவிடின் நிலைமைகள் மறுதலையாகுமென்பதற்கு இதுபோன்ற பல சம்பவங்கள் சாட்சி.
இப்போது, நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்களென தீர்ப்பளிக்கப்பட்ட பிரபலங்களின் எதிர்கால அரசியல் எங்கே பயணிக்கும்? சொத்துக்காப்புச் சட்டத்தின் கீழ், சகோதரக் கோஷ்டியை சட்டத்தின் பிடிக்குள் தள்ளும் முயற்சிகள் முடுக்கிவிடப்படலாமென்ற ஆரூடங்களுக்கு மத்தியிலும், கட்சியின் பலத்தில் இச்சகோதரர்கள் நம்பிக்கையுடனே உள்ளனர். இந்நிலையில், பட்ஜெட்டை ஆதரிப்பதற்கு நிபந்தனையும் விதித்துள்ள இவர்கள், தங்களிடமிருந்து கைமாறப்பட்ட நிறைவேற்றதிகாரம் இறுதி வரைக்கும் தங்களையே பாதுகாக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளதாகவே தெரிகிறது.
போரின் வெற்றிக்குப் பின்னர், குறிப்பாக 2019 வெற்றிக்குப் பின்னர், அரசியல் நிர்வாகங்கள் இராணுவ நிபுணர்களால் நிரப்பப்பட்டன. தென்னிலங்கையை பிடியில் வைத்து வேண்டியதைச் செய்யலாமெனப் புறப்பட்டதால், பொருளாதாரத்தில் வீழ நேரிட்டது. 2020 நடுப்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை தெரிந்திருந்த இவர்களால், அங்கு செல்லுமளவுக்கு இமேஜ்கள் இருக்கவில்லை. இதிலிருந்து ஆரம்பமாகவில்லை இந்த வீழ்ச்சி. இச்சகோதரர்களின் மனநிலைகள் இறுமாப்பில் செயற்படத் தொடங்கியதிலிருந்தே ஆரம்பமானது. இந்த ஆரம்பம், பொருளாதாரத்தில் ஆபத்தை ஏற்படுத்த அடித்தளமிட்டது என்பதையே நீதித்துறை சுட்டிக்காட்டி உள்ளது.