அன்றைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக தடம் புரண்ட பொருளாதாரத்தினால் பாதிக்கப்பட்டு கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்ட நாடாக இருந்த போது அனைத்தும் அதளபாதாளத்திற்கு தள்ளப்பட்ட அந்த நேரத்திலே மக்கள் சொல்லொனா துயரங்களை எதிர்கொண்டு விரக்தியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டர்களாக அன்றைய அரசாங்கத்திற்கு எதிராக உணர்வுமிக்கவர்களாக கிளர்ந்தெழுந்த போது மக்களுடன் மக்களாக நானும் களத்திலே நின்றவன் எனும் அடிப்படையிலும் மக்களது வலியினை உணர்ந்தவனாகவும் , இந்தநாட்டின் விடிவிற்காக நல்லதொரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என திரண்ட இளைஞர்கள் தாய்மார்கள் முதியவர்கள் என
அனைவரது உணர்வுகளையும் மதித்து மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கும் யாழில் இருந்து மாத்தறைக்கும் என களத்திலே செயற்பட்ட ஒருவனாக அதே உணர்வுடன் இங்கு நிற்கிறேன்.
கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாடு மிகவும் கடுமையான பொருளாதார பின்னடைவுகளை எதிர்கொண்டு அனைத்துமே சீர்குலைந்து காணப்பட்டது , இதற்கு காரணமானவர்கள் யார் என இலங்கையின் உயரிய உச்ச நீதிமன்றத்தின் நீநி அரசர்கள் தங்களது தீர்ப்பினை வெளிப்படுத்தி இருக்கின்ற நிலையிலே கௌரவ ஜனாதிபதி அவர்களினால் நிதி அமைச்சர் எனும் வகையில் 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் உயர்சபையிலே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவுத்திட்டமானது பொருளாதார வீழ்ச்சியினால் பின்னடைந்து போயுள்ள நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் என கௌரவ ஜனாதிபதி அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாகவே பார்க்கப்பட்டாலும் , நாட்டை மீட்க வேண்டும் என்பதற்காக மக்களது முதுகுகளில் வரிக்கு மேல் வரி என சுமைகளை சுமத்தியேனும் இந்த பின்னடைவிற்கு காரணமானவர்களையும் தன்னை பதவியில் அமர்த்தி அழகு பார்த்தவர்களையும் திருப்திப்படுத்த ஜனாதிபதி அவர்கள் மேற்கொள்ளும் சாமர்த்தியமான முன்னெடுப்பாகவே இது பார்க்கப்பட வேண்டி உள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டமானது நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கிடவும் தற்போதைய சர்வதேச போக்குகளுக்கு நிகராக புதிய பொருளாதார முறைமைக்கு அடித்தளமிடும் வரவு செலவுத்திட்டம் எனும் தொனிப்பொருளில் புத்தபெருமானின் போதனைகளில் சமநிலை வாழ்வினை அடிப்படையாக கொண்டு இவ்வரவு செலவுத்திட்டத்தினை தயாரித்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார் ,
நாடும் நாட்டு மக்களும் வரலாறு காணாத பொருளாதார பின்னடைவினை எதிர்கொண்டு அதளபாதாளத்திலே தத்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில் நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் மக்களது விடிவிற்கும் , திடமானதும் உறுதியானதுமான தீர்வுகளை நிறைவாக கொண்ட ஒரு வரவு செலவுத்திட்டம் இம்முறை ஜனாதிபதி அவர்களினால் முன்வைக்கப்படும் என பாரிய எதிர்பார்ப்புக்களோடு காத்திருந்த அனைவருக்கும் பெரும் ஏமாற்றங்கள் நிறைந்த வரவு செலவுத்திட்ட முன் வைப்பாகவே தற்போதைய சூழலில் இது பார்க்கப்பட வேண்டி உள்ளது.
75 ஆண்டுகளாக நாம் வருமானத்திற்கு ஏற்ப செலவிடவில்லை எனவும் ,வீண் செலவுகளை மேற்கொண்டு தேர்தல்களை வெற்றி கொள்வதனை மாத்திரம் இலக்காக கொண்டு சலுகைகளையும் நிவாரணங்களையும் முன்வைத்து, பொருட்களின் விலைகளை குறைத்து சம்பள அதிகரிப்பை செய்து அரசியல் இருப்பிற்கான வரவு செலவு திட்டங்களையே முன்வைத்து வந்துள்ளதாக அடுத்தவர்களை குற்றம் சுமத்தும் ஜனாதிபதி தன்னுடைய 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட முன்வைப்பிலே அடுத்தவர் மீது விரல் சுட்டி விட்டு தானும் அதே பாணியையே கடைப்பிடித்து தனது எதிர்கால தேர்தல் வெற்றியினையும் அரசியல் இருப்பினையும் இலக்காக கொண்டதுடன் தன்னை பதவியில் அமர்த்தி அழகுபார்க்கும் அன்றைய அரச பிரதிநிதிகளையும் அவர்களது பின்புலம் கொண்டவர்களையும் திருப்திப்படுத்தும் அரசியல் நகர்வினையே தானும் பிரதானமாக்கியுள்ளார்.
நாட்டினது பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்து நாட்டினை வங்குரோத்து நிலைக்கு ஆளாக்கி மக்களை பாகுபாடின்றி எரிபொருளிற்கும் அத்தியாவசிய பொருட்களுக்குமாக வரிசையிலே நிறுத்தி, முழு நாட்டையும் இருளிலே மூழ்கச் செய்து கல்வி சுகாதாரம் விவசாயம் என அனைத்து துறைகளையும் முடங்கச் செய்து இந்நாட்டின் பொருளாதார அழிவிற்கும் வங்குரோத்து நிலைமைக்கும் காரணமானவர்கள் என கௌரவம் நிறைந்த நீதியரசர்கள் குழாமினால் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளாக தீர்ப்பு வழங்கப்பட்டவர்களையும் , அக்குற்றவாளிகளது பின்புலத்தை பலமாகவும் ஆசிர்வாதமாகவும் கொண்டவர்களையும் காப்பாற்றிடவும் , அவ்வாறானவர்களை மகிழ்வித்து மனங்குளிர வைத்து தனது இருப்பினை தக்கவைக்கவும் இவ்வரவு செலவு திட்டத்தினை அரசியல் எதிர்பார்ப்பினை அடித்தளமாக கொண்டு சமர்ப்பித்து விட்டு ” அரசியல் நோக்கத்திற்காக மாயைகளை பரப்புவதை நிறுத்துங்கள் ‘” என ஜனாதிபதி ஏனையவர்களை பார்த்து கோருவது பெரும் வேடிக்கையாக உள்ளது.
அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் நிவாரணம் வழங்கும் செயற்பாட்டை விமர்சித்தவராக நாட்டிலே பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போவதாக கூறும் ஜனாதிபதி அதே அரசியல் நோக்கத்தை இவ்வரவு செலவுத்திட்டத்திலே கடைப்பிடித்து வெறும் வார்த்தை ஜாலங்களையும் பசப்பு வார்த்தைகளையும் கூறி நாட்டை மீட்பதை விடவும் தன்னுடையதும் தன்னை பதவியில் நிலை நிறுத்தியவர்களினதும் இருப்பிலேயே தனது கவனத்தை குவித்துள்ளமையையே இவ்வரவு செலவுத்திட்டம் வெளிப்படுத்தி நிற்கிறது என்றால் மிகையாகாது,
நாட்டின் அப்பாவி மக்கள் மீது வரிச்சுமைகளை அடுக்கடுக்காக சுமத்தி மக்களை மேலும் மேலும் நலிவடைய செய்வதனை தவிர்த்து அன்றைய அரசியல்வாதிகளாலும் ஊழல் பேர்வழிகளாலும் நாட்டுக்கு வெளியிலே குவிக்கப்பட்டுள்ள கறுப்பு பணங்களையும் முறையற்ற வகையிலே சேர்க்கப்பட்ட சொத்துக்களையும் சுவீகரித்து நாட்டின் பொருளாதாரத்தை வலுவடைய செய்ய திறந்த மனதுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் தனக்குள்ள பொறுப்புக் கூறலின் அடிப்படையிலும் செயற்பட்டு எந்த திருடர்களையோ ஊழல் பேர்வழிகளையோ பாதுகாக்க முற்படாமல் நாட்டை முன்னேற்ற திறந்த மனதுடன் செயலாற்றுவதை நிரூபித்திட வேண்டும் என இவ்உயரிய சபையிலே வேண்டிக்கொள்ளும் அதே வேளை,
தேர்தல் வெற்றியை விட நாட்டின் வெற்றியே முக்கியம் எனவும் சமநிலை தத்துவத்தின் பிரகாரம் நாட்டின் வெற்றிக்காக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஜனாதிபதி- உண்மையிலேயே இது நாட்டை வெற்றி கொள்ள சமநிலை வாழ்வின் அடிப்படையில் தான் உள்ளதா என தனது மனசாட்சியினை உரசிப்பார்த்து விடையளிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த நாட்டினை சீரழித்த எவரையும் அரசியல் இருப்பினை இலக்காக கொண்டு பாதுகாக்க முற்படாமல் பணவீக்கத்தை சீர் செய்து மக்களது வாழ்க்கை செலவை குறைப்பதுடன் அரச இயந்திரங்களிலே நிறைந்துள்ள ஊழல்களை களைய முன்வர வேண்டும், சுகாதார துறை , விவசாயம் என எத்துறையை எடுத்தாலும் அவை எல்லாம் சீரழிந்து சின்னாபின்னமாக காணப்படுகின்றது , சீரான மருத்துவ வசதிகள் பலவீனப்பட்டு காணப்படுவதனால் சுகாதாரத்துறையின் பலவீனம் காரணமாக மக்கள் தங்களது உயிர் காத்தலுக்கு கூட அவஸ்த்தைப்பட்டு வருகின்றமை மிகுந்த வேதனையளிக்கிறது , தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபை (NMRA) இன் ஒழுங்கீனங்கள் தற்போது பேசுபொருளாகி தொடர் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றன,
விவசாயத்துறையின் திட்டமிடப்படாத தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் கடந்த காலத்திலே விவசாயிகள் எதிர்கொண்ட பிரச்சனைகளில் இருந்து இன்னுமே விடுபட முடியாமல் தவிக்கின்றனர், உரிய நேரத்திற்கு பசளை உரங்கள் கிடைக்காமையால் விவசாயிகள் பரிதவிப்பதுடன் , விவசாய உற்பத்திகளும் இன்றி மக்கள் பசி பஞ்சத்தில் வாடும் சூழலை கடந்த அரசு உருவாக்கி வைத்துள்ளது,
ஏன் கடந்த காலங்களில் உலகத்தையே தன் பக்கம் வைத்திருந்த இலங்கை கிரிக்கட்டானது இன்று தகுதியிழந்து தடை விதிக்கப்பட்ட இழிவான கட்டத்திற்கு சென்றுள்ள துயர நிலையிலே காணப்படுகின்றது , 2048ஆம் ஆண்டை முழு தேசத்திற்குமான வெற்றி இலக்காக நோக்கிய பயணமாக ஜனாதிபதி குறிப்பிடுவதால் கிரிக்கெட் துறையிலே மீண்டும் நாம் உலகை வெல்வதாக இருந்தால் அந்த அணியின் வீரர்கள் இன்னும் பிறந்திருக்க மாட்டார்கள் அந்த வீரர்கள் மூலமே இனி உலகளாவிய வெற்றி சாத்தியமாகலாம் என்ற கட்டத்திலே தான் நமது கிரிக்கெட் விளையாட்டின் சூழல் வந்துள்ளது ,
இவ்வாறு நாட்டின் மொத்த இயக்கமும் அரசியல் காரணங்கள் அழுத்தங்கள் காரணமாக பலவீனப்பட்டு உள்ள நிலையிலே தற்போதைய பொருளாதார சுமையினால் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வோர்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதன் காரணமாக எதிர்கால சந்ததியினரது இருப்பே இன்று கேள்விக்குறியாகி உள்ளது , ஜனாதிபதி அவர்கள் அரசியலை இலக்காக கொள்ளாமல் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் திருப்திப்படுத்தி மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்திற்காக தன்னை அர்ப்பணிக்க முன்வரவேண்டும்.
2048 ஆம் ஆண்டிலே நாம் இருப்போமோ இல்லையோ ஆனால் இந்த நாட்டினை கட்டி எழுப்புவதற்கும் இந்த நாட்டினது பொருளாதாரத்தினை முன்னேற்றிடவும் நாம் பெரும் தியாகங்களை செய்வதற்கு இப்போதே முன் வர வேண்டும், நான் பதவியிலே இருக்க வேண்டும் நான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்திலே எவரும் செயற்படாது அவஸ்த்தைப்படும் மக்களை முன்னேற்ற வேண்டும் , நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என சிந்திக்க வேண்டும்.
கடந்த அரசின் திட்டமிடப்படாத சுயநல அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைகளுக்கான சுமைகளை இன்று அப்பாவி மக்கள் கடனாளிகளாக சுமந்து கொண்டிருக்கின்றார்கள், குறிப்பாக விமானமே வராத , எந்த ஒரு சதமும் வருமானம் தராத சர்வதேச விமான நிலையம் , யாருமே விளையாடாத சர்வதேச விளையாட்டு மைதானம், ஞாபகார்த்த அரங்கு என அடுக்கிக் கொண்டே செல்லும் அளவுக்கு பெறுமதியற்ற சுயநல அரசியலுக்கான அபிவிருத்தி பணிகள் பரந்து கிடக்கின்றன, இவ்வாறான குறுகிய அரசியல் சிந்தனையிலிருந்து விடுபடுவதற்கு நாம் அனைவரும் திடசங்கற்பம் பூளும் அதே வேளை முன்னுதாரணமாகவும் இருக்க வேண்டும்.
கடந்த கால யுத்த மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டதும் நலிவடைந்த நிலையிலே வடக்கு கிழக்கு மக்கள் காணப்படுவது ஜனாதிபதி முதல் அனைவரும் அறிந்ததும் புரிந்ததுமான ஒன்றாக காணப்படுகின்றது, இங்குள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அனைவரும் தமது பூரண ஒத்துழைப்பினை நல்குவது காலத்தின் கட்டாயமான ஒன்றாகும் , இங்கு நல்லிணக்கம் கட்டியெழுப்ப பட வேண்டும் , கடந்த காலத்திலே உறுதியளிக்கப்பட்ட பல விடயங்கள் இன்னுமே அமுல்படுத்தப்படாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது , காணிப்பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் , குறிப்பாக பன்னம்பலம ஆனைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட பிரதேச செயலக எல்லை விவகாங்கள் கூட இத்தனை காலமும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளன, இவ்வாறான புறக்கனிப்புக்களால் சமாதானம் சகவாழ்வு பாதிக்கப்படும் நிலை அவ்வப்போது ஏற்படுகின்றது , மட்டக்களப்பு மாவட்டத்திலே பன்னையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரையினை தக்க வைத்துக் கொள்வதற்கும் தங்களது கால்நடைகளை பராமரிக்கவும் கடுமையாக போராடும் சூழலை எதிர்கொள்கின்றனர், இவ்விடயம் சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும், மட்டக்களப்பு மாவட்டத்திலே எத்தனையோ காணி முரண்பாடுகள் காணப்படுகின்றன , எமது ஏறாவூர் பிரதேசத்திலே அமைந்துள்ள பிரதானமான தேசிய பாடசாலையாக காணப்படும் அலிகாரின் இடப்பற்றாக்குறையை தீர்ப்பதற்காக அருகில் உள்ள பொலிஸ் காணியை துரிதமாக வழங்கி அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்வதுடன் ஓட்டமாவடி மத்திய கல்லூரியினுடைய மைதான காணி தொடர்பில் அனைத்து தரப்பாலும் அங்கீகரிப்பட்ட விடயம் தீர்க்கப்பட வேண்டும் ,வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நீண்ட காலமாக இயங்கி வந்த பதிவாளர் பிரிவு மீண்டும் அங்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதுடன் காத்தான்குடி காங்கையனோடை பாலமுனை பகுதி மக்களது காணி முரன்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும், இவ்வாறாக மாவட்ட மக்களது காணி விவகாரங்கள் எல்லை விவகாரங்களிலே ஜனாதிபதி கவனம் செலுத்தி தீர்வினை பெற்றுக் கொடுக்க தனது காலப்பகுதியினுள் முயல வேண்டும் , உங்களுடன் ஆரம்ப காலங்கள் முதலே பணியாற்றி வந்தவன் எனும் அடிப்படையிலே இந்த வரவு செலவு திட்டத்தை கொண்டு நாட்டினது பொருளாதாரத்தை நிலைநிறுத்த எண்ணுவது போல இப்பகுதி மக்களது பிரச்சனைகளை தீர்ப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன்…