புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை சம்பந்தமாக விளக்கமளிக்கும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நேற்று மாலை (16) ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தது. அதன்போது அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீன் அவர்களால் முன்வைக்கப்பட்ட சில கருத்துக்கள் தொடர்பில் விளக்கமளிக்க ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் என்ற வகையில் நான் நிர்பந்திக்கப்பட்டுள்ளேன்.
2020ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்துக்கான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் எமது கட்சியான முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் (தற்போதைய ஐக்கிய தேசிய கூட்டமைப்பு) தராசு சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி ஒரு கூட்டணியாக போட்டியிட்டது. அம் முயற்சியின் பயனாக மூன்;று தசாப்தங்களுக்கும் மேலாக புத்தளம் மாவட்டம் இழந்திருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வென்று கொள்ள முடிந்தமையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அலி சப்ரி ரஹீம் அதிகூடிய விருப்பு வாக்குகiளை பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருதார் என்பதும் அனைவரும் அறிந்ததே.
தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களுக்குள் அன்றைய ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்துக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. கோவிட்19 நோய்த் தொற்றின் காரணமாக உயிரிழந்த முஸ்லிம் ஜனாசாக்களை தயவு தாட்சண்யம் இன்றி தகனம் செய்யப்படுவதற்கு எதிராக நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் அன்றைய அரசாங்கத்துக்கு பலத்த கண்டனங்களை தெரிவித்துக் கொண்டிருந்த வேளையிலும் அவர்களால் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய 20வது திருத்தத்துக்கு ஆதரவாகவும் தனது கட்சியின் தீர்மானத்துக்கு எதிராகவும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் வாக்களித்திருந்தார். அவ்வாறு செயற்பட்ட அப் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என முழு முஸ்லிம் சமூகமும் பலத்த எதிரபார்ப்புடன் இருந்தது.
ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக மேற்கொண்டதை போன்ற முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எதனையும் தமது புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மீது மேற்கொள்ள தவறியிருந்தது.. அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்து விட்டால் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் புத்தளம் நகர பிதா மர்ஹூம் கே.ஏ. பாயிஸ் பாராளுமன்ற உறுப்பினராக வந்து விடலாம் என்ற காரணத்தினால் அவர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாது தட்டிக் கழிக்க பட்டிருக்கலாம். ஆனால் இன்று தங்கம் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் அவரை கட்சியிலிருந்து நீக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
மேற்படி ஒழுக்காற்று நடவடிக்கைகளில் எந்த விதத்திலும் தொடர்பு படாத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமையும் அவர் சாடியுள்ளது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் முயற்சியாகும். இதன்மூலம் தனது தனிப்பட்ட அரசியல் கோபதாபங்களையும் தீர்த்துக்கொள்ள முனைகிறார் என்பதனையே அவரது கருத்துக்களிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
2020 பொதுத் தேர்தலக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யும் இறுதி நாளுக்கு இரண்டொரு தினங்களுக்கு முன்னதாகத்தான் எமது கட்சியின் தராசு சின்னத்தின் கீழ் கூட்டணியாக போட்டியிடும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. நியமனப் பத்திரத்தினை தாக்கல் செய்வதற்காக புத்தளம் செல்வதற்கு முன்தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் என்னை தொடர்பு கொண்டு எமது கட்சியுடன் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட்டுக் கொள்ள வேண்டும் என கூறினார். அதன்படி அவர்களினாலேயே அவ்வுடன்படிக்கையும் தயாரிக்கப்பட்டிருந்தது. நான் அவர்களது காரியாலயத்துக்கு சென்று அதில் கையொப்பமிட்டேன். வெறுமனே இரண்டு பக்கங்களை கொண்டதும், வேட்பாளர்களது பெயர்கள் குறிப்பிடப்படாததுமான ஒரு உடன்படிக்கையையே அவர்கள் எனது கையொப்பத்துக்காக சமர்ப்பித்தார்கள். அந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை சரியான முறையில் தாயரித்து மீண்டும் அதில் கையொப்பமிட ஏற்பாடு செய்யுமாறு இரு வேறு சந்தர்ப்பங்களில் அக் கட்சியின் தலைவர் மற்றும் தவிசாளர் ஆகியோரிடம் நான் கேட்டுக்கொண்டேன். ஆனால் இன்றுவரை அவர்கள் அதனை பொருட்படுத்தாது காலம் கடத்திவிட்டு அவ் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிராத சில விடயங்களை அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறி அவற்றை நான் மீறிவிட்டதாக நேற்றைய தினம் (16) என் மீது அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளனர்.
அலி சப்ரி ரஹீம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படும் பட்சத்தில் அவ்வெற்றிடத்தை நிறப்புவதற்காக அடுத்த நிலையிலுள்ள வேட்பாளர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சாராத நேரடி ஐக்கிய தேசிய கூட்டமைப்பு உறுப்பினராகவே கருதப்பட வேண்டியவராக இருந்தார். ஆனால், இவ்வருட ஆரம்பத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களுக்கான நியமனப்பத்திரங்கள் கோரப்பட்டபோது அவர் பிறிதொரு கட்சியில் இணைந்து கல்பிட்டி பிரதேச சபைக்கான வேட்பாளராக போட்டியிட அக்கட்சியின் நியமனப் பத்திரத்தில் கையொப்பமிட்டுளளதாக எமது கட்சிக்கு தகவல் கிடைத்தது. தேர்தல் ஆணையகத்தில் அதனை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னர் அவரிடமிருந்து அதற்கான விளக்கமொன்றை பெற்றுக் கொள்ள எமது கட்சி தீர்மானித்து அதற்கான விளக்கத்தினை 14 நாட்களுக்குள்ளாக எமக்கு அனுப்பி வைக்கும்படி கடிதம் அனுப்பப்பட்டது. அதேவேளை அந்த வேட்பாளர் மீண்டும் கட்சி மாறி அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைத்துக் கொள்ளப்பட்டதாக மற்றொரு தகவலும் கிடைக்கப்பெற்றிருந்தது.
ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு தமது கட்சியைச் சாராத அடுத்த நிலையிலுள்ள வேட்பாளர்களை தன்னிச்சையாக தமது கட்சிக்குள் இணைத்துக் கொள்வதும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் சொல்வதைப்போல புரிந்துணர்வை மீறும் செயல்தான் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு கட்சி மாறிய வேட்பாளருக்கு நாம் அனுப்பியிருந்த விளக்கம் கோரலுக்கான பதில் கடிதத்தில், அவர் கூட்டணியிலுள்ள எந்தக் கட்சியையும் சாராதவர் எனவும் தான் ஒருபோதும் எமது கட்சியில் அங்கத்தராக இணைந்து கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளதோடு எனவே, அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள எமது கட்சிக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறும் பட்சத்தில் எந்தவொரு கட்சிக்கும் கட்டுப்படாத தன்னிச்சையாக செயற்படும் ஒரு உறுப்பினராகவே இருப்பார். ஆகவே, அவ் வேட்பாளருடனும் அவரை எமது கூட்டணிக்குள் இணைப்பதற்கு காரணமாக இருந்த புத்தளம் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனும் கலந்தாலோசித்து அவரை எமது கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் தீர்மானித்திருந்தோம்.
எனவே, எமது கட்சி முகம் கொடுக்கவுள்ள சில பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு அலி சப்ரி ரஹீம் எம்.பி. தொடர்பிலான விசாரனைகளின் முடிவினை இரண்டு வாரங்களுக்கு தாமதிக்குமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. எமது வேண்டுகோளை புறந்தள்ளிவிட்டு அடுத்த நாளே அவரை கட்சியிலிருந்து விளக்கும் தீர்மானத்தினை நிறைவேற்றி, ஒரு முக்கிய அலுவல் காரணமாக கொழும்புக்கு வெளியில் சென்றிருந்த என்னை உடனடியாக கொழும்புக்கு அழைத்து கடந்த நவம்பர் 5ம் திகதி இரவு அக்கடிதம் என்னிடம் கையளிக்கப்பட்டது. அக்கடிதத்தின் பிரதி அலி சப்ரி ரஹீம் ரஹீம் எம்.பி.க்கு அனுப்பப்பட்டதாகவம் கூறப்பட்டதோடு அவரை பாராளுமன்ற பதவியில் இருந்து நீக்குவதற்கான எமது கடிதத்தை உடனடியாகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் ஒப்படைக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.
ஒரு கட்சியின் செயலாளர் என்ற வகையில் எனது கட்சியின் உயர்பீட உறுப்பினர்களது அங்கீகாரத்தை பெற வேண்டியுள்ளதன் அவசியத்தை அவர்களுக்கு தெளிவுபடுத்திய போதும் அதற்கு அவர்கள் உடன்படவில்லை. ஏற்கனவே கட்சியின் உயர்பீடம் மூலம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளும் இருக்கின்ற போது நான் தனியாளாக எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்ள முடியாத நிலையிலிருந்தேன். எனவே அதற்கான கால அவகாசம் எனக்கு வழங்கப்பட வேண்டும் என அறிவித்து விட்டு வந்தேன். என்றாலும் அவர்களோ தமது கட்சிக்கு புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட வேட்பாளரை தம்முடன் தக்கவைத்துக் கொள்வதிலேயே குறியாக இருந்ததாக ஊகிக்க முடிந்தது. எமது வேண்டுகோளுக்கிணங்க கால அவகாசம் வழங்குவதை அவர்கள் வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டதாகவே நாம் கருதுகிறோம்.
அதே தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் தமது தீர்மானம் ஊடகங்களுக்கும் பகிரங்கப் படுத்தப்பட்டிருந்தது. பல்வேறு ஊடகங்களும் என்னைத் தொடர்பு கொண்டு மேற்படி ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் எனது கருத்தை அறிய முற்பட்டன. இரண்டு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட உள்ளக முரண்பாட்டை சந்திக்கு கொண்டு வந்து அதன் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரையோ ஏனைய அங்கத்தவர்களையோ விமர்சிப்பதை நான் நாகரீகமாக கருதவில்லை. எனவே நான் அலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதை சில நாட்களாக தவிர்த்து வந்தேன்.
இதற்கிடையில்தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை (13) அலி சப்ரி ரஹீம் எம்.பி. யினால் இடைக்கால தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாக எனக்கு அறிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் (15) என்னை தொடர்பு கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகம் இந்த வழங்கு விடயத்தில் நாம் அவர்களது கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அது விடயமாக எமது ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராக உள்ளதாகவும், நேற்று காலை (16) நாம் சந்தித்து அது பற்றி கதைப்போம் எனவும் உறுதியளித்திருந்தேன். அதனை அவரது கட்சித் தலைவருக்கு எத்தி வைத்ததாகவும் அவர் எனக்கு தெரிவித்தார். இவ்வாறான தொலைபேசி உரையாடல்கள் நடந்தும் நேரில் சந்திப்பதற்கான காலமும் குறிக்கப்பட்டிருந்த நிலையிலும் நேற்றைய தினம் மாலைவரை நான் தொலைபேசிக்கு பதிலளிக்காது தவிர்ந்து வருவதாகவும் அதன்மூலம் அலி சப்ரி ரஹீம் எம்.பி. மாவட்ட நீதிமன்றம் செல்வதற்காக நான் உதவி செய்ததாகவும் என்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தான் செய்த தகடுதத்தங்களை மறைப்பதிலும் கூட சிறு பிள்ளளைதனமாக அரசியல் ஆதாயம் தேடுகின்ற முயற்சியாகவே நான் இதனை கருதுகிறேன். ஒழுக்காற்று நடவடிக்கைகள் சம்பந்தமான வழக்குகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் அவர் இவ்வாறு நடந்து கொள்வதையிட்டு வருந்துகிறேன்.
அடுத்த கட்சிகளிலிருந்து உறுப்பினர்களை காவுகொண்டு தனது கட்சியை வளர்க்கும் முயற்சியையும் கட்சிகளுக்கு இடையிலான சில்லறை பிரச்சினைகளை பாரியதொரு சமூகப் பிரச்சினையாக மக்கள் மயப்படுத்த முனையும் வழமையையும் இனியாவது அவர் தவிர்ந்து கொள்வதே நல்லது.
மஸீஹுதீன் நயீமுல்லாஹ்
செயலாளர் நாயகம்
ஐக்கிய தேசிய கூட்டமைப்பு