மேல் மாகாணத்தில் சுமார் 70 வீதமான பாடசாலை வளாகங்கள், நுளம்பு உற்பத்தியாகும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளதாக, தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, இது கண்டறியப்பட்டுள்ளதாக, டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நவம்பர் மாதத்தில் இதுவரை 3 ஆயிரத்து 844 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக, தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்பிரகாரம், இந்த ஆண்டில் இதுவரை 72 ஆயிரத்து 337 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், 45 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு அதிக ஆபத்தான வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
எனவே, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்கண்டு, அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன பொது மக்களைக் கேட்டுள்ளார்.
(ஐ. ஏ. காதிர் கான் )