கொழும்பு
வெல்லம்பிட்டி பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சு கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலய கல்வி அலுவலக அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, குறித்த பாடசாலைக்குச் சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஜயவர்தனபுர வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று முற்பகல் (15) கைகளை கழுவிக் கொண்டிருந்த முதலாம் தரத்தைச் சேர்ந்த 06 மாணவர்கள் மீது பாடசாலையில் தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த கொங்கிரீட் சுவர் இடிந்து விழுந்தது.
விபத்தில் காயமடைந்த மாணவி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் பிரதேசவாசிகள் குழுவொன்று பாடசாலையின் அதிபரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலையில் நிலவிய அமைதியின்மை காரணமாக பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.