தேசிய திரைப்படக் கூட்டுத் தாபனத்தை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மறுசீரமைக்க வேண்டும்.
அரங்காற்றுகைச் சபைக்குப் பதிலாக அரங்காற்றுகை தரம்பிரித்தல் சபை.
கலைப்படைப்புகளிலிருந்து “தணிக்கை” என்பது அகற்றப்படும்.
கலைப்படைப்புகளை குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டுவருவதைத் தடுப்பதற்கு திருத்தங்கள்- ஜனாதிபதி.
இலங்கைத் திரைப்படத்துறை சர்வதேசத் தரத்தை எட்ட வேண்டும். அதற்காக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் உட்பட அதனுடன் இணைந்த சகல நிறுவனங்களையும் மறுசீரமைக்கும் பணிகளை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு தாமரைத் தடாக திரையரங்கில் நடைபெற்ற “ஜனாதிபதி சினிமா விருதுகள் – 2023” விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
அரங்காற்றுகைக் கட்டுப்பாட்டுச் சபைக்கு மாறாக அரங்காற்றுகை பன்முகப்படுத்தல் சபை ஒன்றை உருவாக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் சினிமாவில் இருந்து தணிக்கை என்ற சொல்லை, நீக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தற்போது கலைப் படைப்புகள் பல்வேறு குற்றவியல் சட்டங்களின் கீழ் கொண்டுவரப்பட்டு கலைஞர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், இதனைத் தவிர்க்க திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்புகளை வகைப்படுத்தும் சபைக்கு முதலில் சமர்ப்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்த அனைத்து சட்டங்களையும் அடுத்த வருடம் முதல் அமுல்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
மூன்று வருடங்களுக்கு பின்னர் ஜனாதிபதி சினிமா விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் திரையிடப்பட்ட 42 திரைப்படங்களின் அடிப்படையில், பிரபல திரைப்பட விமர்சகர்கள் மற்றும் பேராசிரியர்கள் கொண்ட நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 44 விருதுகள் வழங்கப்பட்டன. இதனைத்தவிர மேலும் 09 விசேட விருதுகளும் வழங்கப்பட்டன.
இங்கு, 2020 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை கலாநிதி நந்தா மாலனி பெற்றுக்கொண்டதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நந்தா மாலனி அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று விருதை வழங்கியது சிறப்பம்சமாகும்.
1963ஆம் ஆண்டு சரசவி விருது வழங்கும் விழாவில் கலாநிதி நந்தா மாலனிக்கு இலங்கை சினிமாவில் பின்னணிப் பாடகருக்கான விருது வழங்கப்பட்டதாகவும், அந்த நிகழ்வில் தனக்கும் பங்குகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்தார்.
கலாநிதி நந்தா மாலனி இலங்கை சினிமா மற்றும் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக முழு தேசத்தின் மரியாதையும் நன்றியும் உரித்தாவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கை சினிமாத் துறைக்கு விசேட பங்காற்றியவர்களுக்கு வழங்கும் “யுக அபிமானி” விசேட விருது டே.குணரட்ணம் நினைவாக சந்திரன் ரட்ணம், சுவினிதா வீரசிங்க மற்றும் சிறில் விக்ரமகே ஆகியோருக்கு ஜனாதிபதியின் கரங்களினால் விருது வழங்கப்பட்டன.
ஜனாதிபதியினால் “சுவர்ணசிங்க” விருதுகளும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.
2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக கமல் அத்தர ஆராச்சியும், 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக குமார திரிமாதுரவும் ஜனாதிபதி விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
அதனையடுத்து 2019இற்கான சிறந்த நடிக்கைக்கான விருதை சமாதி லக்சிறியும், 2020 இன் சிறந்த நடிக்கைகான விருதை நீடா பெர்னாண்டோவும் ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த தயாரிப்பாளராக அனுருத்த ஜயசிங்கவும் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த தயாரிப்பளாராக விசாகேச சந்திரசேகரமும் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான விருது “கின்னென் உபன் சீதல” திரைப்படத்திற்கும் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக “The Newspaper” திரைப்படமும் தெரிவு செய்யப்பட்டன.