- ஐ. ஏ. காதிர் கான் –
( மினுவாங்கொடை – கட்டுநாயக்க செய்தியாளர் ) கொழும்பு – மருதானை, மாளிகாகந்த வீதியில் அமைந்துள்ள “அரூஸிய்யத்துல் காதிரிய்யா” குர்ஆன் மற்றும் ஹிஃப்ழ் மத்ரஸாவின் “மீலாதுன் நபி” தின பெருவிழாவும், பரிசளிப்பு வைபவமும், மத்ரஸா அதிபர் “முகத்தமுஷ்ஷாதுலி” அல் ஆலிம் அல் ஹாஃபிழ் ஏ.டப்ளியூ.எம். ஆதில் (நுழாரி) தலைமையில், மத்ரஸா மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இச்சிறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்றிருந்த அஷ்ஷேஹ் அப்ழழுல் உலமா கலாநிதி தைக்கா நாஸிர் சுஐப் ஆலிம் (பீ.ஏ. – அல் அரூஸி, பாஸில், ஜமாலி, ஜலாலி) அவர்கள்,
உவைஸுல் கர்னீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களது வாழ்க்கை சரிதையை பின்னணியாக வைத்து, பெற்றோர்களுடன் பிள்ளைகள் எவ்வாறு ஒழுக்கமாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி, மாணவர்கள் மத்தியில் அறிவுரை பகர்ந்தார். அத்துடன், ஹழ்ரத் ரசூலுல்லாஹி ( ஸல்) அவர்கள் மீது எவ்வாறு (முஹப்பத்) நேசம் வைக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவுகளையும் மாணவர்கள் மத்தியில் முன்னிலைப்படுத்தினார்.
இங்கு விசேட அதிதியாகக் கலந்துகொண்ட கொழும்பு பல்கலைக்கழக உளவியல் வருகை விரிவுரையாளரும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதம ஆலோசகருமான யூ.எல்.எம். நௌபர், மாணவர்கள் மத்தியில் உளவியல் தொடர்பிலான ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டார்.
கௌரவ அதிதியாக ஹனீப் மௌலானா சமூகம் தந்திருந்த இச்சங்கையான நிகழ்வில், மௌலவி அஹமத் ஷா (கலீபதுல் காதிரி – ஜிஷ்தி), மௌலவி எம். மபாஸ் மன்ஸூர் (நுழாரி), மௌலவி அல் ஹாஃபிழ் எம்.எச்.எம். முஹம்மத், அல் ஹாஃபிழா பாத்திமா மஷூதா, முஅல்லிமா பாத்திமா சுபைதா, முஅல்லிமா பாத்திமா இக்ரா, நிர்வாக சபைத் தலைவர் அல்ஹாஜ் ஹில்மி ஹம்ஸா உள்ளிட்ட உலமாக்கள், அதிதிகள், நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கிராஅத், கஸீதா, பேச்சு, தலைப்பாத்திஹா, ஹிஃப்ழ் மனனம் போன்ற போட்டி நிகழ்வுகளில், இம்மத்ரஸாவில் கல்வி பயிலும் 75 மாணவ மாணவிகளும், பெரும் ஆர்வத்தோடு பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, மாணவ மாணவிகளின் போட்டி நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டதுடன், வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
அதிதிகளாக வருகை தந்தோர், இங்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
November 14, 2023
0 Comment
234 Views