இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு
விமல் வீரவன்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எந்தவொரு சாட்சியங்களினாலும் நிறூபிக்கப்படாமையினால் அவரை சகல குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்து விடுதலை செய்யுமாறு அவரது சட்டதரணி நீர்கொழும்பு நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் 23ம் திகதி அறிவிப்பதாக நீதவான் தெரிவித்தார்.
2015 10 23 ம் திகதி முறையற்ற கடவுச்சீட்டை பாவித்து வெளிநாடு செல்ல முற்பட்டு குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டில் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினால் முன்னால் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான் அமில ரத்நாயக்க முன்னிலையில் 10ம் திகதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விமல் வீரவன்ச சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டதரணி சரத் ஜயமான்ன தனது சேவை வழங்குபவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் எந்தவொரு சாட்சியங்களினாலும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதனால் சேவை வழங்குபவரை சகல குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதி சட்டதரணி மேலும் வாதிடுகையில் முறையற்ற கடவுச்சீட்டை உபயோகித்தது தண்டனைக்குறிய குற்றமென குற்றப்
பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குற்றவியல் வழக்காக குறிப்பிட்டாலும் இது குற்றவியல் வழக்கல்ல.
இந்த வழக்கில் சாட்சியம் அளித்த குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இருவரும் இந்தக் கடவுச்சீட்டு முறைசாரா ஒன்று என உறுதிப்படுத்த வில்லை. மேலும் எனது சேவைவழங்குபவர் குற்றம் செய்தார் என சாட்சியங்களில் கூறப்படவுமில்லை, சாட்சிப் பட்டியலில் மேலும் சில சாட்சியாளர்கள் இருந்த போதிலும் முறைப்பாட்டாளரால் அவர்கள் அழைக்கப்பவில்லை. இதன்மூலம் தெரியவருவது விமல் வீரவன்ச கைதுசெய்யப்பட்டது ஏதோவொரு பலவந்தத்தினாலாகும். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது எனவும் ஜனாதிபதி சட்டதரணி தெரிவித்தார்.
விமல் வீரவன்சவுக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய் அல்லவென முறைபாட்டாளர் சார்பாக ஆஜரான சட்டதரணி மன்றில் தெரிவித்தார்.
இது தொடர்பான கட்டளையை நவம்பர் 23ம் திகதி அறிவிப்பதாக தெரிவித்த நீதிபதி அன்றய திணத்திற்கு வழக்கை ஒத்திவைத்தார்.