2023.11.03 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் ஜெனீவாவிற்கு குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு நடைபெற்ற ஐ.நா வின் சமூக மன்ற மாநாட்டில் பங்கேற்று உலகளாவிய ரீதியில் முன்னிலை வகிக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆய்வுரையை முன்வைத்ததோடு ஐ.நா சபை வளாகத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதில் அன்றைய தினம் ஜுமுஆ பிரசங்கமும் நிகழ்த்தினார்கள்.
இலங்கை அறிஞர்களை பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த ஜெனீவா சமூக மன்ற மாநாட்டில் கலந்து கொண்ட ஜம்இய்யாவின் தலைவர் அவர்கள் மனித உரிமைகளை மறுசீரமைப்பதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வகிபாகம் எத்தகையது என்பது குறித்து அனுபவ ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் தனது பரிந்துரைகளை முன்வைத்தார்கள்.
அத்தோடு ஐ.நா வளாக மஸ்ஜிதில் ஆற்றிய ஜும்ஆ உரையில் உலகில் மனித உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் எனவும், சமூக நீதியும் சகவாழ்வும் நிலைநாட்டப்படுவது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டதோடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினால் உருவாக்கப்பட்ட, உலகில் எழுதப்பட்ட முதலாவது அரசியல் சாசனமாக கருதப்படும் மதீனா சாசனத்தின் சிறப்பசங்களும் மிகச்சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது.
சமூக நீதி மற்றும் சகவாழ்வை ஒரு பன்முக சமூகத்தில் நிலைநாட்ட மதீனா சாசனம் எவ்வகையில் பங்களிப்பை செய்தது என்பதை விளக்கியதுடன் அந்த சாசனத்தை இன்றைய உலகில் நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதன் அவசியமும் குறித்த உரையில் வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து பல்லின சமூகங்களுக்கு மத, கலாசார, நம்பிக்கைகள் விடயத்தில் சகிப்புத்தன்மை, பரஸ்பர உரையாடல் மற்றும் சகவாழ்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசிய ஜம்இய்யாவின் தலைவர் அவர்கள், சிக்கலான உலகில் பல்லின சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வு மற்றும் அமைதியை மேம்படுத்துவதில் ஜம்இய்யா மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான பணிகளையும் சுட்டிக் காட்டினார்கள்.
2023.10.26 அன்று ஐ.நா பொதுச்சபையினால் பலஸ்தீன் காஸா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட உடனடி மற்றும் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்த தீர்மானத்தைப் பாராட்டி ஐ.நா வின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸுக்கு ஜம்இய்யாவின் உத்தியோகபூர்வ கடிதம் ஒப்படைக்கப்பட்டது.
சிவில் உரிமைகளைப் பாதுகாத்தல், மனிதாபிமான சர்வதேச சட்டங்களை நிலைநிறுத்துவதை வலியுறுத்துவதோடு காஸாவில் மனிதாபிமான பணிகள் தொடர்வது, அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுவது, அத்தியாவசிய பொருட்கள், சேவைகள், நிவாரணங்கள், சிவில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவது போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியதாக குறித்த தீர்மானம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2023.11.03 ஆம் திகதி ஜம்இய்யாவின் தலைவர் அவர்களால் நிகழ்த்தப்பட்ட ஜுமுஆ உரைக்கான ஏற்பாடுகளை ஜெனீவாவில் அமைந்துள்ள UHRC அமைப்பின் தலைவர் சகோதரர் முயிஸ் வஹாப்தீன் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.