கொழும்பு
விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்கால நிர்வாக குழு மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு 14 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்தி விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கும் இடைக்கால நிர்வாக சபையை நியமிப்பதற்கும் தடைவிதித்து நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
அத்துடன், அமைச்சரினால் நியமிக்கப்பட்ட அர்ஜுன ரணதுங்க தலைமையிலான கிரிக்கெட் இடைக்கால நிர்வாக குழுவின் உறுப்பினர்கள் அந்தப் பதவிகளில் பணியாற்றுவதைத் தடுத்து மற்றுமொரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன், விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு, மனுதாரர் மற்றும் இலங்கை கிரிக்கட் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில், நீதிமன்றம் மற்றுமொரு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.