அஷ்ரப் ஏ சமட்
மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ளதை நினைவுகூரும் வகையிலும், பெருந்தோட்ட மக்கள் இந்நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்துக்கும் வழங்கிய பங்களிப்பை பாராட்டி, கௌரவிக்கும் வகையிலும், மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்கவைப்பதை பிரதான நோக்கமாகவும் கொண்டு அரச அங்கீகாரத்துடன் – ஒரு தேசிய நிகழ்வாக நடத்தப்பட்ட நாம்200 நிகழ்வு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எமது மக்களுக்காக மிகவும் பிரமாண்டமாகவும், சிறப்பாகவும் இந்நிகழ்வு நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளடங்கலான அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனது அழைப்பையேற்று இந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து சிறப்பித்த இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அம்மையார் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்திய அரசியல் பிரமுகர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், உள்ளிட்டோருக்கும் இலங்கை அரசின் சார்பிலும், எமது மலையக மக்கள் சார்பிலும் நன்றிகளை சமர்ப்பித்துக்கொள்கின்றேன். எமது சமூகத்தின் முன்னோக்கி பயணத்துக்கு உங்கள் அனைவரினதும் ஆதரவு என்றும் எமக்கு தேவை.
அத்தோடு, தமக்கான இந்நிகழ்வில் உரிமையுடன் பங்கேற்று நிகழ்வை முழுமைப்படுத்திய எனது மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அதேபோல நிகழ்வுக்குரிய ஏற்பாடுகளை சிறப்பாக செய்வதற்கு எனக்கு ஒத்துழைப்பு நல்கிய எனது அமைச்சின் செயலாளர், பிரத்யேக செயலாளர், ஆலோசகர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அனுசரணை வழங்கிய வர்த்தக சங்கங்கள், பெருந்தோட்ட கம்பனிகள் தலைவர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள், வர்த்தகர்கள், ஊடக நண்பர்கள், சமூக நலன்விரும்பிகள் உள்ளிட்ட நல் உள்ளங்களுக்கும் நன்றி கூறியவனாக அவர்களை நினைவுபடுத்துகின்றேன்.
மலையகம் இன்று எல்லா துறைகளிலும் முன்னேறிவரும் நிலையில், இந்த 200 நிகழ்வு நாம் அடுத்தக்கட்டம் நோக்கி வேகமாக பயணிப்பதற்கும், மலையக மாற்றத்துக்கும் சிறந்ததொரு ஆரம்பமாக அமைந்துள்ளது என்பது உறுதி. அமைச்சர் ஜீவன் தொண்டமன்.