எதிர்வரும் 07 ஆம் திகதி செவ்வாய் (07.11.2023) இரவு 8.15 மணியளவில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகும் “பாரம்பரியம்” நிகழ்ச்சித் தொடரில், முஸ்லிம் சேவைக்கு பங்களிப்பு செய்தோர் வரிசையில் மறைந்த முதுபெரும் தமிழ் இலக்கிய ஆளுமை கவிஞர் பாவலர் பஸீல் காரியப்பர் அவர்களின் எழுத்துகள், வானொலி பற்றிய நினைவுகள் பரிமாறப்பட இருக்கின்றன.
இவரது நினைவுகளை இன்னுமொரு இலக்கிய ஆளுமை, கல்வியாளர், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறைக்கான சிரேஷ்ட முதன்மை பேராசிரியர் அல்ஹாஜ் ரமீஸ் அப்துல்லாஹ் நேயர்களோடு பகிர்ந்து கொள்கிறார்.
ஈழத்து இலக்கியப் பரப்பில் முத்திரைப் பதித்த ஒரு யதார்த்த கவிஞரே பாவலர் பஸீல் காரியப்பர்.
வாழ்வியல் தத்துவங்களை பாடுவதில் வல்லவர். பிரவியிலேயே சக மனித நேயம் மிக்கவராக இவர் இருந்ததாலேயே, இவரால் மனித தத்துவத்தின் மேன்மையைப் பாட முடிந்திருக்கிறது.
இலங்கையிலும், இந்தியாவிலும் மிக பிரபலமாகி 1966 தொடக்கம் 78 வரை பாடலாசிரியர் யார் என்று அறிய படாமல் 12 ஆண்டுகள் அவ்வப்போது பிரபல ஒலிபரப்பாளர் பரராஜசிங்கம் அவர்களின் இனிய குரலில் ஒலித்துக்கொண்டிருந்த “அழகான ஒரு சோடி கண்கள்” பாடலுக்குரிய சொந்தக்காரர் இவர்தான் என்பது பீ.எச். அப்துல் ஹமீத் உடனான செவ்வியிலேயே வெளிச்சத்துக்கு வந்தது.
ஆர்ப்பாட்டமில்லாத அடக்கமான கவிஞர் இவர்.
சன்மார்க்க ஆர்வலரான இவர் அதிகமான சன்மார்க்க விழுமியங்களை தன் எழுத்துகளால், வாசகர் கண் முன்னே கொண்டு வந்தார்.
இவரது நினைவுகளை சுமந்து வரும் இந்நிகழ்ச்சியை எம்.எஸ்.எம்.ஜின்னா தொகுத்தளிக்க முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் எம்.ஜே.பாத்திமா ரினூஸியா தயாரித்தளிக்கிறார்.
November 4, 2023
0 Comment
241 Views