கொழும்பு:
பிச்சை எடுக்கும் நாடாக இல்லாமல் பலமான பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப எவ்வளவு சிரமமான தீர்மானமாக இருந்தாலும் இன்றைய தினம் எடுக்க வேண்டிய தீர்மானங்களை இன்றே சரியாக எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
VAT வரியை 18% அதிகரிப்பதற்கான தீர்மானம் தானோ அல்லது அமைச்சரவையோ தானாக முன்வந்து எடுக்கவில்லை என்றும் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு எடுக்கப்படும் தீர்மானம் எனத் தெரிவித்த ஜனாதிபதி, தலைமைத்துவம் என்பது மக்களுக்கு உண்மையை விளக்கி நாட்டுக்கு சரியான தீர்மானங்களை எடுப்பதையே குறிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
தேர்தலை நெருங்கியுள்ள பாராளுமன்றத்திற்கு இவ்வாறான கடினமான தீர்மானங்களை எடுப்பது கடினமான விடயம் என்பது ஜனாதிபதியின் கருத்தாகும்.
நாட்டுக்காகத் தீர்மானங்களை எடுப்பதற்கு இளைஞர் தலைமைத்துவமும் பயிற்றுவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டுக்காக உழைக்கக் கூடிய இளம் அமைச்சர்கள் குழுவொன்று இன்று அரசாங்கத்தில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அவர்களுடன் இணைந்து சிறந்த பொருளாதார நிலைமையை உருவாக்குவதற்குச் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு வங்கிக் கடன் வழங்குவது குறித்து அறிவிப்பை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.