ராகமை பிரதேசத்தில் சிங்கள மொழி பேசும் 368 மலாயர் முஸ்லிம் குடும்பங்களை இலக்காகக் கொண்டு, தெமட்டகொடை – அகில இலங்கை வை.எம். எம். ஏ. பேரவையின் 175 ஆவது கிளை, பேரவையின் கொழும்பு – கம்பஹா மாவட்ட பணிப்பாளர் நஸாரி காமில் தலைமையில், ராகமை – சனிரோ வரவேற்பு மண்டபத்தில், (22) ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
“ராகமை பிரதேசத்தில் வசிக்கும் பௌத்த கிறிஸ்தவ முஸ்லிம் தமிழ் மக்களுக்கு இடையில் பரஸ்பர நல்லெண்ணத்தை மென்மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இக்கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன மத மொழி பேதங்களுக்கு அப்பால் நின்று சகல சமய மக்களுக்கும் சேவையாற்ற முடியும். எமது அனைத்து கிளைகளும், முழுக்க முழுக்க மிகச்சிறந்த சேவைகளையே மக்களுக்கு வழங்கி வருகின்றது.
ஆண்கள் பெண்களுக்குத் தேவையான கைத்தொழில் வசதிகள் மற்றும் அதற்குத் தேவையான தளபாடங்களுடன் பயிற்சி நெறிகள், வறிய நிலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் அவர்களுக்குத் தரம் வாய்ந்த வழி காட்டல்களுடன் பயனளிக்கும் வகையிலான கருத்தரங்குகள் என, பல்வேறு செயற் திட்டங்களை எமது அனைத்து கிளைகளின் ஊடாகவும் முன்னெடுத்து வருகின்றோம்.
கடந்த கொவிட் – 92 காலத்தில் கூட, அநாதரவான மக்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் வாழ்வாதார உதவிகளை, சமூக நோக்காக மாத்திரம் கருத்திற் கொண்டு மேற்கொண்டிருக்கிறோம். அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் ரமழான் காலங்களிலும் இதுபோன்ற உதவிகளைப் புரிந்து வருகின்றோம்.
எமது பேரவை உள்ளிட்ட அனைத்து கிளை உறுப்பினர்களது அயராத உழைப்பும் பங்களிப்புக்களுமே இதற்கு பிரதான காரணமாகும். அவர்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் நிதானமாகவும் பணியாற்றுவது, எனக்கு மன மகிழ்வைத் தருகின்றது. எமது ராகமை கிளையும், மக்களுக்குத் தேவையான அதன் சேவைகளை, இன்று முதல் நேர்த்தியாக வழங்கும் என்பதையும் பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்”.
இவ்வாறு, இங்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இக்கிளையைத் திறந்து வைத்து உரையாற்றும்போது, வை.எம். எம். ஏ. பேரவையின் தேசியத் தலைவர் இஹ்ஸான் ஏ. ஹமீத் குறிப்பிட்டார்.
இவரது வழிகாட்டலின் கீழ் திறந்து வைக்கப்பட்ட இச்சிறப்பு நிகழ்வில், முன்னாள் தேசியத் தலைவர் சஹீத் எம். றிஸ்மி, அகில இலங்கை வை.எம்.பீ.ஏ. (பௌத்த பேரவை) தேசியத் தலைவர் மஹேந்திர ஜயசேகர ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
ராகமை பிரதேசத்தில் தமிழ் மொழி பேசும் மக்கள் இல்லாத நிலை குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது டன், முஸ்லிம்களுக்கென ஒரு பள்ளிவாசல் இல்லாதது தொடர்பிலும் விசேடமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில், பேரவையின் தலைமையக மற்றும் மத்திய கொழும்பு கிளை உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
November 1, 2023
0 Comment
264 Views