இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு
காணாமற்போனாரின் 33 வது வருடாந் நினைவேந்தல்
27 ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை சீதுவ,ரத்தொழுகமவில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் நடைபெறவுள்ளது.
காணாமல் ஆக்கப்படாத நாட்டை கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளில் காணாமற்போனாரின் குடும்ப ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இந் நினைவேந்தல் நிகழ்வு அதன் தலைவர் பிரிட்டோ பிரனாந்து தலைமையில் நடைபெறும்.
இங்கு இலங்கை முழுவதும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக மலர் அஞ்சலி செலுத்தி நினைவு கூறப்படவுள்ளன.
இராணுவத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்டவர்களின் பொது நினைவுத் தூபிகள் நாட்டின் பல பிரதேசங்களில் இருந்தாலும், அவர்களுக்காக அரசாங்கம் விகாரைகளை நிர்மாணித்தாலும் எமது அன்பானவர்களுக்காக எமது முயற்சியால் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபி ரத்தொழுவையில் மாத்திரமே உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இம்முறை நினைவேந்தல் வேலைத்திட்டத்தின் விசேட அம்சமாக நினைவு தூபியில் காணப்படாத காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பலரின் புகைப்படங்களை புதிதாக சேர்த்துள்ளனர்.
அரசாங்கம் வட கிழக்கு யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவேந்தல் தூபிகளை கடந்த காலங்களில் சேதப்படுத்தியது. சிங்களம், தமிழ், முஸ்லிம் வேறுபாடின்றி பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறும் உரிமைக்காக நாம் முன்னிற்பதுடன் வட கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட குடுபங்களின் போராட்டத்தை கட்டுப்படுத்துவதை விடுத்து அவர்களின் குரலுக்கு செவிசாய்க்குமாறும் சகல தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை பெற்றுகொடுக்குமாறும் நாம் அரசை வலியுறுத்துகிறோம் எனவும் காணாமற்போனாரின் குடும்ப ஒன்றியம் தெரிவிக்கின்றது.
மேலும் மனித குடும்பத்தின் சகலரினதும் வாழும் உரிமைக்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்துடன் கை கோர்க்குமாறு ஒன்றியம் அன்புடன் அழைப்புவிடுக்கிறது.
காணாமல் ஆக்கப்படுவது மனித நேயத்திற்கு எதிரான பாரிய குற்றமாகும். அது மீண்டும் நிகழ இடமளிக்காமல் இருப்போம் என உறுதிபூண்டுள்ளனர்.