- தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்
இஸ்மதுல் றஹுமான்
மக்களின் எதிர்பால் சுருட்டிக்கொள்ளப்பட்ட கடந்த அரசாங்கத்தின் மீன்பிடி சட்டவரைபையே இந்த அரசாங்கமும் கொண்டுவர தீர்மாணித்துள்ளதாக அறிகிறோம். தேசிய மீனவ கொள்கைக்கு உற்பட்ட மக்களிடையே கலந்து உரையாடப்பட்டு தயாரிக்கப்படும் புதிய மீன்பிடி சட்டமே எமக்குத் தேவை என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க ஏற்பாட்டாளர் ஹேமன் குமார நீர்கொழும்பு காரியாலயத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில் இந்த அரசாங்கம் புதிய மீனவ சட்ட வரைபை நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக அறிகிறோம். நாம் அரசிடம் கேட்பது 2023 ல் கடந்த அரசாங்கத்தில் தயாரிக்கப்பட்ட சட்ட வரைபையா நிறைவேற்றப் போகிறீர்கள் என்று.
அந்த சட்டவரைபுக்கு மீனவ சமூகத்திலும் சிவில் சமூகத்திலும் பாரிய எதிர்ப்பு கிளம்பின. இதனால் அந்த சட்ட வரைபை சுருட்டிக்கொள்ள வேண்டிய நிலமை அப்போதைய அமைச்சரக்கு ஏற்பட்டது.
இந்த புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு மாதங்களே கடந்துள்ளன. 2 மாதங்களில் புதிய சட்ட வரைபை தயாரிக்க காலம் போதாது. அதனால் கொண்டுவரப்படவுள்ள சட்டவரைவு கடந்த அரசாங்கத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட மீனவ சட்டவரைவு என்பதே எமது நம்பிக்கையாகும்.
கடந்த அரசாங்கம் தயார்செய்த மீனவ சட்டத்தை அப்படியே கொண்டுவர வேண்டாம் மக்கள் மத்தியில் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் சமர்பிக்குமாறு கேட்டுக்கொண்டோம். அதற்கு முன்னாள் அமைச்சர் சாதகமாக செயல்பட்டு அதனை பாராளுமன்றத்தில் சமர்பிக்கவில்லை.
டக்ளஸ் தேவானந்த அமைச்சராக இருக்கும் போது தயாரித்த அதே சட்டமுலத்தையே கொண்டு வரவுள்ளனர்.
இது தொடர்பாக நாம் தற்போதைய அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரைச் சந்தித்து எமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் எமது கருத்துக்களையும் கூறி அதனை எழுத்து மூலம் சமர்பித்தோம்.
எமக்கு மீன்பிடி சட்டம் தேவை. மீன்பிடித் துறையை முகாமைத்துவப்படுத்த நிபந்தனைகள் அவசியம். எனவே தேசிய மீனவ கொள்கைக்கு உட்பட்ட மக்களிடம் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் தயாரிக்கும் புதிய சட்ட மூலமே எமக்கு அவசியமாகும்.