ஐ. ஏ. காதிர் கான் –
( மினுவாங்கொடை – கட்டுநாயக்க செய்தியாளர்
இலங்கையில் வெளியாகும் தமிழ் பத்திரிகைகள் மற்றும் ஐ.ரீ.என். – வசந்தம் தொலைக்காட்சி சேவை ஆகியவற்றின் கொழும்பு பிராந்திய செய்தியாளரான ஊடகவியலாளர் அஷ்ரப் ஏ. சமத், ஆங்கில மொழி மூலம் மூன்று வருட பயிற்சி நெறியான உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா செயலாளர் பயிற்சி நெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தமைக்காக, ஆங்கில உயர் டிப்ளோமா சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.
கல்வியமைச்சின் கீழ் உள்ள (சிலியட்) ஸ்ரீலங்கா உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவனத்தில், நாடளாவிய ரீதியிலுள்ள 15 மாவட்ட கல்வி நிறுவனங்களில் உயர் தேசிய டிப்ளோமா பயிற்சி நெறிகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தவர்களுக்கு, 18 ஆவது முறையாக உயர் டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கும் டிப்ளோமா பட்டமளிப்பு விழாக்களின்போதே, ஊடகவியலாளர் அஷ்ரப் ஏ. சமத் இச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.
இச்சிறப்பு விழாக்கள், கடந்த 20 ஆம், 21 ஆம், 22 ஆம் (வெள்ளி, சனி, ஞாயிறு) தினங்களில் ஒன்பது நிகழ்வுகளாக, கொழும்பு – பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், ஸ்ரீலங்கா உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சீ.எஸ். லெவன கமகே தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுகளின்போது கொழும்பு ,தெஹிவளை, கம்பஹா, குருநாகல், கண்டி, காலி, இரத்தினபுரி, சம்மாந்துறை, அம்பாறை, மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய பிரதேசங்களிலுள்ள நிறுவனங்களில் பொறியில் துறை, வணிகத்துறை, கணனி தொழில் நுட்பம், உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா போன்ற 15 ற்கும் மேற்பட்ட உயர் டிப்ளோமா பாட நெறிகளைப் பூர்த்தி செய்த 5065 மாணவர்களுக்கு இவ்வுயர் டிப்ளோமா பட்டங்கள், இச்சிறப்பு விழாக்களின்போது வழங்கி வைக்கப்பட்டன.
க.பொ.த. உயர்தரத்தில் சித்தியடைந்து, பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமல், தமது துறைகளைத் தாமே தெரிவு செய்து, ஆங்கில மொழி மூலம் 1 வருட, 2 வருட, 3 வருட டிப்ளோமா பாட நெறிகளைப் பயின்று, இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் இறுதிப்பரீட்சைக்குத் தோற்றி, அதில் சிறப்புச் சித்தி பெறும் மாணவர்களே, குறித்த டிப்ளோமா சான்றிதழ்களைப் பெறத் தகுதி பெறுகின்றனர்.
அந்தவகையில், ஊடகவியலாளர் அஷ்ரப் ஏ. சமத், ஆங்கில உயர் டிப்ளோமா சான்றிதழைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடக்தக்கது.
இவ்விழாக்களின் இறுதி நாள் நிகழ்வில், கல்வியமைச்சின் செயலாளர் எம். என். ரணசிங்க பிரதம அதிதியாகவும், உயர் கல்வி நிறுவனத்தின் அனைத்து பணிப்பாளர்கள், ஏனைய பல்கலைக் கழக பீடங்களின் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டு, உயர் டிப்ளோமா சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.