– Rauf Hakeem SLMC leader-
26.12.2024 அன்று அதிகாலை சுபஹு தொழுகை தொழுத பிறகு நிந்தவூரில் இருந்தும், அட்டாளைச்சேனையில் இருந்தும், கொழும்பில் இருந்தும் வந்த தொலைபேசி அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் பேராசிரியர் இஷாக் அவர்கள் மக்கமா நகரில் இறையடி எய்திய செய்தியாக இருந்தது.
எமது சமூகத்தின் புலமை சொத்துக்களில் ஒருவரும், தென்கிழக்கு பல்கலைகழகத்தில் வேந்தராக இருந்து அங்கு பொறியியல் பீடம் அமைய காரண கர்த்தாவாக இருந்தவருமான இவரும், இவரது குடும்பமும் அவரது காசப்பா வீதி; ஜாவத்தை இல்லமும், நமது பேரியக்கத்தின் முக்கிய நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்டிருப்பது தற்கால கட்சி தொண்டர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.
தலைவர் அஷ்ரப்பின் நெருங்கிய உறவினரான இவருடைய குடும்பத்தினர், குறிப்பாக அவரது மனைவி மர்ஹுமா நஸ்லி, மாமனார் மர்ஹூம் பஸீல் ஏ மஜீத், மைத்துனி மரினா, அவரின் கணவர் மர்ஹூம் மஹ்ரூப் மற்றும் உறவினர்கள் பலரோடும் நெருங்கிய தொடர்பாடல் எங்களுக்கு இருந்தது.
சிலகாலம் தலைவரின் குடும்பத்தினரும் அவரது காசப்பா வீதியில் வசித்து வந்ததாலும் , அக்கால கட்டத்தில் அடிக்கடி கட்சி ஒன்று கூடல்கள் அங்கு நடப்பதும் அந்த சந்திப்புக்களின் போது அந்த குடும்பத்தார் எங்களுக்கு செய்த விருந்தோம்பல்களையும் எங்களலால் மறக்க முடியாது.
1993ஆம் ஆண்டளவில் எமது கட்சி செயலாளர் சஹீட் அவர்களின் மறைவுக்கு பின்பு சிறிது காலம் செயலாளராக நியமிக்க்பபட்டிருந்த முன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் சுஹைப் ஏ காதர் அவர்களை தவிசாளராக நியமன மாற்றம் செய்து , அந்த செயலாளர் பதவிக்கு என்னை நியமனம் செய்ததும் இந்த காசப்பா வீதி வீட்டில் வைத்துத்தான் என்பதை கூற நான் கடமைப் பட்டுள்ளேன்.
கட்சி எதிர் நோக்கிய பல நெருக்கடிகளின் போது இவரது இல்லத்தில் நாம் கூடுவதும் நீண்ட கலந்தாலோசனைகளில் ஈடுபடுவதும், அவ்வீட்டாருக்கு ஒருபோதுமே சுமையாக அல்லது இடையூறாக அவர்கள் கருதியதேயில்லை என்பதையும் நன்றியறிதலோடு பதிவிட கடமை பட்டுள்ளேன்.
அன்னாரின் மாமனார் மர்ஹூம் பஸீல் ஏ மஜீத் எமது கட்சியின் பொறுப்பான பதவியில் இருந்தது மாத்திரமல்ல, கட்சியின் கடித தலைப்புகளில் தனது சொந்த கையாலயே கடிதங்களை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தருகின்ற பெருந்தன்மையும் அவரிடம் இருந்தது.
பேராசிரியர் இஷாக் நீண்டகாலம் பணியாற்றிய சவூதி தஹரான் நகரில் உள்ள பெற்றோலிய கனிய வள பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகின்ற பிரசித்தம் மிக்க முன்னணி பல்கலைகழகத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றிய எனது மைத்துனர் பேராசிரியர் எம்.எம். வஸீர் குடும்பத்தினருடனும் , இஷாக் அவர்கள் நெருங்கிய தொடர்பை பேணியதால் எங்களுக்குள் அந்நியோன்யம் வளர்ந்தது. எப்போதுமே சமூக பிரச்சினைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் தலைவராக நீண்ட காலம்; பணியாற்றிய பெருமை இவருக்கும் இவரது குடும்பத்துக்கும் உள்ளது.
இவருடைய ஆன்மீக ஈடுபாடு அலாதியானது. என்றும் எப்போதுமே குர்ஆன் ஓதலிலும் வேளாவேளை ஜமாஅத்தோடு தொழுவதற்கு ஜாவத்தை பள்ளிவாயலுக்கு போவதும் இவரது வழமையாக இருந்தது. புனித உம்ரா கடமையை தன்னுடைய புதல்வர், புதல்வியரோடு நிறைவேற்றி இருந்த சூழலில் அவர் இறையடி சேர்ந்திருப்பது இறைவன் அவரை பொருந்தி கொண்டான் என்பதற்கு அத்தாட்சியாக அமைவதாகவே கருதுகிறேன்.
நேற்று ஜூம்ஆ தொழுகையின் பிறகு அவர் தவறாமல் ஜமாஅத்தோடு தொழுகின்ற அதே ஜாவத்தை பள்ளிவாயலில் அவரின் நினைவாக நடத்திய ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டு அன்னாரினதும் அவரது மாமனார் மர்ஹூம் பஸீல் ஏ மஜீத், அவர்களினதும் அவரது துனைவியார் மர்ஹுமா நஸ்லி, அவரின் மைத்துனி மரீனாவின் கணவர் மர்ஹூம் மஹ்ரூப் ஆகிய அனைவருக்குமாக பிரார்த்தனை செய்ய வாய்ப்பை தந்ததை எண்ணி மன ஆறுதல் பெறுகிறேன்.
இறைவன் இவர்களின் நல்லமல்களை பொருந்திக் கொள்வானாக என பிரார்த்தனை செய்கின்றேன்.
ஆமீன் !