புதிய சபாநாயகர் யார் என்பது தொடர்பில் 16.12.2024 இடம்பெறவுள்ள ஆளுங்கட்சி குழுக் கூட்டத்தின் பின்னர் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.
கலாநிதி பட்டம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைக்குக் காரணமாக அசோக ரன்வல சபாநாயகர் பதவியிலிருந்து விலகினார். கல்வி தகைமைகளை உறுதிப்படுத்தும் வரை குறித்த பதவியிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 21 ஆம் திகதி 10வது நாடாளுமன்றின் முதல் அமர்வில் அசோக சபுமல் ரன்வல சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறான பின்னணியில் சபாநாயகர் அசோக ரண்வலவுக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணைக்கான கையொப்பங்களைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், புதிய சபாநாயகர் தொடர்பில் இன்று இடம்பெறும் ஆளுங்கட்சி குழுக் கூட்டத்தின் பின்னர் தீர்மானிக்கப்படும் எனத் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது நாடாளுமன்றில் ஏற்பட்டுள்ள சபாநாயகர் பதவிக்கு அடுத்த நாடாளுமன்ற தினத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் பெயரும் முன்மொழியப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.