இஸ்மதுல் றஹுமான்
நத்தார் மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு அங்காடி வியாபாரத்திற்காக நீர்கொழும்பு நகரில் இடங்களை ஒதுக்கிக் கொடுப்பதற்கு நீர்கொழும்பு மாநகர சபை இம்முறை விலைமனு கோரியது.
இதற்கு முன்பு அரசியல் செல்வாக்குள்ள குறிப்பிட்ட ஓரிருவருக்கு இடங்களை ஒதுக்கிக் கொடுக்கப்பட்டன. அவர்கள் இடங்களை பிரித்து தான் நினைத்த விலைக்கு வியாபாரிகளுக்கு வழங்கினர். இதனால் பெறுமளவு பணத்தை இடைத்தரகர்களே சுருட்டிக்கொண்டனர்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் இம்முறை நீர்கொழும்பு மாநகர ஆணையாளரினால் நேரடியாக விலைமனு கோரப்பட்டன. கூடுதலான விலைகள் கோரியவர்களுக்கு அந்தந்த இடங்கள் வழங்கப்பட்டதாக மாநகர ஆணையாளர் தெரிவித்தார். இதனால் மாநகர சபைக்கு இம்முறை சுமார் ஐம்பது இலட்சம் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்குப்பின் இந்த அடிப்படையிலேயே விலைமனு கோரப்பட்டே இடங்கள் ஒதுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய போக்குவரத்துக்கு இடைஞல் இன்றி குறிப்பிட்ட சில வீதிகளிலேயே அங்காடி வியாபாரத்திற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பில் வாராந்தம் சனிக்கிழமைகளில் இரவு சந்தை நடைபெற்று வருகின்றது. நத்தார் காலத்தில் சனிக்கிழமைக்கு மேலதிகமாக மேலும் மூன்று நாட்களுக்கு இரவு சந்தை நடாத்த வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு அன்றாடம் வியாபாரம் செய்பவர்கள் தமக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி எதிர்புத் தெரிவித்தனர். இருபக்க கருத்துக்களையும் கருத்தில் எடுத்த ஆணையாளர் மேலதிகமாக இரண்டு நாட்கள் இரவு சந்தை நடாத்த அனுமதி வழங்கியுள்ளார்.
இதேவேளை நீர்கொழும்பு நகருக்கு வாகணங்களில் வரும் பாவனையாளர்களின் வசதிகருதி பஸ் நிலையத்திற்கு அருகாமையில் தெபேரும்வத்தையில் தற்காலிக வாகண தரிப்பிடமும் அமைக்கப்பட்டுள்ளது.