எதிர்வரும் பண்டிகை காலத்தில் விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதியான ஒரு தொகை உணவுப்பொருட்களை நுகர்வோர் விவகார அதிகார சபையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி, கடலைப்பருப்பு என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
களனி – பெத்தியகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பொருட்கள் கலாவதியான நிலையில் அவற்றின் திகதிகளை மாற்றி பண்டிகை காலத்தில் விற்பனை செய்வதற்குத் தயாராக வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வத்தளை பகுதியில் இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகளால் முன்னெடுக்கப்படும் களஞ்சியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, காலாவதியான 4 டன் காய்ந்த மிளகாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு இவ்வாறான வர்த்தகர்களைக் கண்டறிவதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறான தகவல்கள் இருப்பின், 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகார சபையின் துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்துமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த சில மாதங்களாகச் சந்தையில் நாட்டு அரிசிக்குப் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இந்த விடயம் தொடர்பில் தீர்வொன்றை வழங்குவதற்காகச் சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுடன் அரசாங்கம் பல தடவைகள் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதும் தீர்வு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, சந்தையில் நிலவும் நாட்டு அரிசி பற்றாக்குறைக்குத் தீர்வு காணும் வகையிலும், அரிசி விலையைக் கட்டுப்படுத்தவும் 70,000 மெற்றிக் டன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.
இதற்கான விலை மனு கோரல் நடவடிக்கையும் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தற்போதும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை மீறி சந்தையில் அரிசி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றன.